ஃபேன் சிகியை வீழ்த்தினார் யஷஸ்வினி: அகமதாபாத்தை சாய்த்த ஜெய்ப்பூர் - யுடிடி ஹைலைட்ஸ்

ஸ்ரீஜா அகுலா, யஷஸ்வினி
ஸ்ரீஜா அகுலா, யஷஸ்வினி
Updated on
2 min read

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 6-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் சென்னை லயன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஃபேன் சிகி, யு மும்பா அணியில் உள்ள உலகத் தரவரிசையில் 81-வது இடத்தில் உள்ள யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார். 20 வயதான யஷஸ்வினி கோர்படே 2-1 என்ற கணக்கில் ஃபேன் சிகியை தோற்கடித்து அசத்தினார். உலக டேபிள் டென்னிஸ் தொடரில் 2 முறை பட்டம் வென்றுள்ள ஃபேன் சிகி, உலகத் தரவரிசையில் அதிகபட்சமாக 11-வது இடம் வரை பிடித்துள்ளார். யஷஸ்வினி கோர்படே முதல் செட்டை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

தொடர்ந்து 2-வது செட்டை ஃபேன் சிகி 11-6 தன்வசப்படுத்தினார். தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் 2-7 என பின்தங்கியிருந்த யஷஸ்வினி கோர்படே கடுமையாக போராடி 11-10 என வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு சீசனில் ஃபேன் சிகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை யஷஸ்வினி கோர்படே பெற்றார்.

அகமதாபாத்தை 11-4 என்ற கணக்கில் சாய்த்த ஜெய்ப்பூர்: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் - அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவுடன் மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா 3-0 (11-10, 11-8, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து), அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ஜியோர்ஜியா பிக்கோலினுடன் (இத்தாலி) மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் 3-0 (11-7, 11-5, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த டையில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 6-0 என முன்னிலை பெற்றது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஆகியோரை அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் (ஜெர்மனி) ரிகார்டோ வால்தேர் மற்றும் ஹாயிகா முகர்ஜி ஆகியோர் இணைந்து 2-1 என்று செட் கணக்கில் வீழ்த்தினர்.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரிகார்டோ வால்தேரை 2-1 என்ற செட் கணக்கில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா வீழ்த்தினார். கடைசியாக நடைபெற்ற 5-வது ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹாயிகா முகர்ஜி ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in