Published : 07 Jun 2025 10:10 PM
Last Updated : 07 Jun 2025 10:10 PM
மியூனிச்: நாளை நடைபெற உள்ள யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் அணியின் 17 வயது இளம் வீரர் லாமின் யாமல் குறித்து போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியுள்ளார்.
‘ரொனால்டோ vs யாமல்’ என இப்போது இந்த ஆட்டம் குறித்த ஹைப் உருவாக்கப்பட்டு உள்ளது. இருவரும் தங்கள் அணிக்காக இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கோல் பதிவு செய்தனர். போர்ச்சுகல் ஜெர்மனியையும், ஸ்பெயின் பிரான்ஸ் அணியையும் அரையிறுதியில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“உலகத்தின் சிறந்த தேசிய கால்பந்து அணியாக ஸ்பெயின் உள்ளது. விளையாட்டில் ஒரு தலைமுறையை சேர்ந்த வீரர் வருவதும், மற்றொரு தலைமுறையை சேர்ந்தவர் இந்த மேடையை விட்டு வெளியேறுவதும் வழக்கம். நீங்கள் என்னை மற்றொரு தலைமுறையை சேர்ந்தவராக பார்த்தால் எனக்கு ஓகே தான்.
ஊடகத்தில் எப்போதும் ஹைப் ஏற்றுவார்கள். அது ரொனால்டோ மற்றும் வேறொருவர் என சொல்வார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எப்போதுமே இரு அணிகளுக்கு இடையில் தான் ஆட்டம். லாமின் யாமல் குறித்து அதிகம் பேசுகிறீர்கள். அது சரிதான். ஏனெனில், அவர் சிறந்த வீரர். தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், நான் ஸ்பெயின் அணி குறித்து பேச விரும்புகிறேன்.
அந்த அணியில் நிக்கோ வில்லியம்ஸ் உள்ளார், சிறந்த மிட்ஃபில்டர் பெத்ரி உள்ளார், அதோடு அணியின் பயிற்சியாளராக லூயிஸ் உள்ளார். இப்படி அந்த அணி மிக வலுவாக உள்ளது.
ஊடகத்தின் வசம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். யாமல் இளம் வீரர். அவரை வளர விடுங்கள். தேவையற்ற அழுத்தம் அவருக்கு கொடுக்க வேண்டாம். அவரது ஆட்டம் இன்னும் மேம்படும். அவரது இயல்பில் வளர்ந்து, தனது ஆட்டத்திறனை அனுபவிக்க விடுங்கள். அதுதான் கால்பந்துக்கு நல்லது. அவரது ஹேர்ஸ்டைல் வேடிக்கையாக உள்ளது. எனது மகனை விட மூன்று வயது மட்டுமே அவர் மூத்தவர்” என ரொனால்டோ கூறியுள்ளார்.
நேஷன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை 2019-ல் போர்ச்சுகல் அணியும், 2023-ல் ஸ்பெயின் அணியும் ஏற்கெனவே வேண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையே விரைவில் தொடங்கவுள்ள ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்க மாட்டேன் என ரொனால்டோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT