Published : 03 Jul 2018 02:50 PM
Last Updated : 03 Jul 2018 02:50 PM

நெய்மரின் நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல: மெக்சிகோ பயிற்சியாளர் கடும் தாக்கு

நெய்மரின் நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல என்று மெக்சிகோ பயிற்சியாளர் ஜுவான் கேர்லோஸ் கூறியுள்ளார்.

சமாராவில்  திங்கட்கிழமை  நடந்த ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில்.

இடைவேளைக்குப் பிறகு வில்லியன் நெய்மர் கூட்டணியில் 51-வது நிமிடத்தில் நெய்மர் மிக அருமையான கோலை அடித்தார், பிறகு கடைசியில் 88-வது நிமிடத்தில் ஃபர்மினோ இன்னொரு கோலை அடிக்க பிரேசில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வீரர் நெய்மர் மெக்சிகோ வீரர்களின் தடுப்பாட்டத்தால் கீழே விழுந்து வலியால் துடித்தார். எனினும் நெய்மரின் இந்த செயல் சற்று மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும் கால்பந்து உலகிலும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து  மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜுவான் கேர்லோஸ் கூறும்போது,  "நெய்மரின் இந்த நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல. இது கால்பந்தாட்டத்துக்கு அவமானம். அந்த ஒரு வீரரால் நாங்கள் நிறைய  நேரங்களை இழந்தோம். கால்பந்தாட்டம் ஆழ்ந்து சிந்தித்து விளையாட வேண்டிய விளையாட்டு. இரைச்சலுடன் விளையாடக் கூடாது. எல்லா மக்களும், குழந்தைகளும் பார்க்கும் ஆட்டத்தில் நடிப்பு இருக்கக் கூடாது. இதனால் எங்களது ஆட்ட வேகத்தில் தாக்கம் ஏற்பட்டது. நேற்றைய ஆட்டம் முழுவதும் பிரேசிலுக்கு சாதகமாக இருந்தது” என்றார்.

மெக்சிகோவுடனான ஆட்டம் மட்டுமில்லாமல் இந்த ஆண்டின் உலகக் கோப்பை பிரேசில் ஆடிய முந்தைய போட்டிகளில் நெய்மர் மீது அவரது அணியினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x