இந்தக் கொண்டாட்டம் அவசியமா? - ஆர்சிபி உரிமையாளரை சும்மா விடக்கூடாது: மதன்லால் ஆவேசம்

இந்தக் கொண்டாட்டம் அவசியமா? - ஆர்சிபி உரிமையாளரை சும்மா விடக்கூடாது: மதன்லால் ஆவேசம்
Updated on
2 min read

ஒரு நாட்டின் அணி உலகக்கோப்பையை வெல்கிறது அதைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. ஆனால் ஒரு பிராந்திய அணி அதுவும் பிராந்திய வீரர்களுக்கு இடமளிக்காத உலக வீரர்களையும் பிற மாநில வீரர்களையும் வைத்து நடத்தப்படும் பணமழை ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக ஏதோ பெரிய சாதனை போல் அதைக் கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இருக்காது. 11 பேர் உயிரைப் பலி வாங்கிய கொண்டாட்டம் தேவைதானா என்று அனைவரும் கேள்வி எழுப்ப, 1983 உலகக்கோப்பை வென்ற அணியிலிருந்த மதன்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ஆர்சிபி கொண்டாட்டங்களினால் 11 பேர் பலியாகி 33 பேர் காயமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் கிரிக்கெட் ஒரு மதமாகவும் வீரர்கள் தெய்வங்களாகவும் வழிபடும் ஒரு மவுட்டீகமான போக்கு நிலவுவதே இத்தகைய துயரமான சம்பவங்களுக்குக் காரணம். இத்தகைய கொண்டாட்டம் தேவையா என்ற கேள்விக்கு ஆர்சிபி வீரர்களிடத்திலோ, உரிமையாளரிடத்திலோ, ஆளும் கட்சியினிடத்திலோ பதில் இல்லை.

நிவாரணம் அரசு அளிப்பது மக்களுக்கான ஆறுதல்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அணி உரிமையாளர்களிடத்திலும் விராட் கோலி போன்ற ஹை புரொபைல் வீரர்களிடத்திலும் வசூல் செய்து கொடுப்பதுதான் நியாயம்.

பொதுவாகவே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பிராந்திய வெறியை ஊட்டி வளர்க்கின்றனர். இந்திய அணி என்றால் தேசிய வெறியை வளர்த்தெடுக்கின்றனர். இந்த ரசிகர்கள் இயல்பான கிரிக்கெட் ரசிகர்கள் அல்ல. இவர்கள் அணிகளால் அதன் சார்பு ஊடகங்களால், சமூக ஊடகம் என்னும் நச்சு வலையினால் உருவாக்கப்பட்டு வெறியேற்றப்படும் ரசிகர்கள். தோனி, கோலி என்று என்னவோ உலகில் இல்லாத அதிசய நாயகர்கள் போல் உசுப்பேற்றப்பட்டு தெய்வ ’உரு’வாக்கி நாயக வழிபாட்டு நசிவுக் கலாச்சாரத்தின் விளைவுகளே இத்தகைய துயரங்கள்.

இந்நிலையில் மதன்லால் கூறியதாவது, “11 பேர் உயிரிழப்பு என்பது உண்மையில் பெரும் துரதிர்ஷ்டமே. இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கவே கூடாது. நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டியது.

அகமதாபாத்தில்தான் செவ்வாய் இரவு கொண்டாடி விட்டீர்களே, பிறகு பெங்களூருவில் இவ்வளவு அவசரமாகக் கொண்டாட்டம் தேவைதானா? 2-3 நாட்கள் பொறுத்து கொண்டாட்ட நிகழ்வை வைத்திருக்கக் கூடாதா? 2-3 நாட்கள் பொறுத்து வைத்திருந்தாலும் ஆர்சிபி ரசிகர்கள் வரத்தான் போகிறார்கள்.

யாரைத்தான் குற்றம் சொல்வது ஆர்சிபியையா? மாநில அரசையா? மாநில அரசு அனுமதி மறுத்திருந்தால் நிச்சயம் கொண்டாட்டங்கள் நடந்திருக்காது, இந்தத் துயரமும் ஏற்பட்டிருக்காது. ஆகவே அரசும் பொறுப்புதான். அதே வேளையில் ஆர்சிபி நிர்வாகமும் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள்தான்.

லேண்டிங் ஆன 4 மணி நேரத்தில் கொண்டாட்டம் தேவையா? அப்படி என்ன அவசரத் தேவை இருக்கிறது? ஐபிஎல் பெரிய ரசிகப் பட்டாளங்களைக் கொண்டது, இது உரிமையாளருக்குத் தெரியாதா?

இந்தத் துயரத்தினால் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியற்று துன்பமாக மாறிவிட்டது. ஆர்சிபி ஏன் இத்தனை அவசரமாக கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? தகவல் தொடர்பில் பெரிய இடைவெளி. நம் நாட்டில் தொடர்ச்சியாக மனித உயிர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை” என்று சாடியுள்ளார் மதன் லால்.

போலீஸ் அனுமதி மறுப்பு: வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகும் ஊரில் இது தேவையில்லை என்றே போலீஸ் மறுத்துள்ளது. ஆனால் ஆர்சிபி நிர்வாகம் பிடிவாதமாகப் பலரையும் பிடித்து இந்தக் கொண்டாட்டத்தைப் பிடிவாதமாக நடத்தியுள்ளது என்றே சில ஊடகங்கள் கூறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in