Last Updated : 03 Jun, 2025 11:57 PM

1  

Published : 03 Jun 2025 11:57 PM
Last Updated : 03 Jun 2025 11:57 PM

சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த ஆர்சிபி: IPL Finals டாப் 10 தருணங்கள்!

க்ருனால் பாண்டியா

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில் ஆர்சிபி வென்றது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் ‘டாப் 10’ தருணங்கள் குறித்து பார்ப்போம்.

சால்ட் ஏமாற்றம்: ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிலிப் சால்ட், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆர்சிபி அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுக்க தவறியது. அதனால் 200+ ரன்கள் என்ற ரன்களை முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி எட்டவில்லை.

ஜேமிசன் மிரட்டல்: பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது லைன் மற்றும் லென்தில் உறுதியாக இருந்தனர். அந்த வகையில் மிகவும் நிதானமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் பஞ்சாப் பவுலர் ஜேமிசன். 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்திருந்தாலும் சால்ட், ரஜத் பட்டிதார் மற்றும் லிவிங்ஸ்டோன் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

விராட் கோலி நிதான ஆட்டம்: இறுதி போட்டியில் 35 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அவரது ஸ்ட்ரைக் ரேட் 123 என இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் பாணியில் கோலி ஆடியதாக ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.

அர்ஷ்தீப் அசத்தல்: முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் வீசி இருந்தார். அவர் அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதை செய்ய தவறி இருந்தால் நிச்சயம் 200+ ரன்களை ஆர்சிபி எட்டி இருக்கும்.

பிரேக்த்ரூ கொடுத்த ஹேசில்வுட்: 191 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் 5-வது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார். அங்கிருந்து பஞ்சாப் அணியின் சரிவு தொடங்கியது.

ஸ்ரேயஸ் ஏமாற்றம்: அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சீசனில் சிறந்த முறையில் ஆடி ரன் சேர்த்துள்ளார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால், இறுதிப் போட்டியில் 1 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அது ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது விக்கெட்டை ரொமாரியோ ஷெப்பர்ட் வீழ்த்தினார்.

க்ருனால் பாண்டியா அபாரம்: ஆர்சிபி அணிக்கு மேட்ச் வின்னராக இந்த ஆட்டத்தில் ஜொலித்தார் க்ருனால் பாண்டியா. 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். பிரபிசிம்ரன் மற்றும் ஜாஷ் இங்கிலிஸ் ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார்.

சொதப்பிய நேஹல் வதேரா: பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் 18 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஆட்டம் பஞ்சாப் அணிக்கு பின்னடைவை தந்தது. அவரை ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற்றலாம் என வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். அந்த அளவுக்கு ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அவரது ஆட்டம் ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைந்தது.

கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசிய ஷஷாங் சிங்: கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹேசில்வுட் வீழ்த்தினார். அந்த ஓவரில் 6 பந்துகளையும் ஷஷாங் சிங் எதிர்கொண்டார். 0, 0, 6, 4, 6, 6 என ரன்கள் எடுத்தார். இறுதியில் 6 ரன்களில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கண்கலங்கிய கோலி: ஐபிஎல் 2008-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் ஆர்சிபி அணியின் முக்கிய அங்கமாக விராட் கோலி உள்ளார். 4 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி விளையாடி உள்ளது. இதற்கு முன்பு மூன்று முறையும் 2-வது இடத்தில் ஆர்சிபி தொடரை நிறைவு செய்தது. இப்போது 4-வது முயற்சியில் பட்டம் வென்றுள்ளது.

ஹேசில்வுட் கடைசி ஓவரை வீசிய போது களத்தில் அப்படியே கண் கலங்கினார் விராட் கோலி. ஆர்சிபி அந்த ஓவரில் ஒவ்வொரு பந்தாக நெருங்க நெருங்க உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கின. அதன் பின்னர் ஆர்சிபி வீரர்கள் கோலி உடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x