IPL Finals RCB vs PBKS: பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி - பட்டம் யாருக்கு?

IPL Finals RCB vs PBKS: பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி - பட்டம் யாருக்கு?
Updated on
1 min read

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி பட்டம் வெல்ல 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

மயங்க் அகர்வால், 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சஹல் வீசிய முதல் ஓவரில் அவர் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பந்தில் வேகத்தை குறித்து ஜேமிசன் வீச, எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸை நிதானமாக அணுகி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த விராட் கோலியின் விக்கெட்டை அஸ்ம்துல்லா ஒமர்சாய் வீழ்த்தினார். 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன்னை ஜேமிசன் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.

மறுபக்கம் அதிரடியாக இன்னிங்ஸை அணுகினார் ஜிதேஷ் சர்மா. 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். துரதிர்ஷ்டவசமாக ஷாட் ஆட முயன்று பந்து பேட்டில் பட்டு இன்ஸைட் எட்ஜ் முறையில் அவர் போல்ட் ஆனார். ஷெப்பர்ட் 17, க்ருணல் பாண்டியா 4, புவனேஸ்வர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. பஞ்சாப் தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அஸ்மதுல்லா, வைஷாக் விஜயகுமார் மற்றும் சஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் தேவை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுகின்ற அணி முதல் முறையாக பட்டம் வெல்லும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in