மறக்குமா நெஞ்சம்: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்த சடகோபன் ரமேஷ்!

சடகோபன் ரமேஷ் | படம்: இன்ஸ்டாகிராம்
சடகோபன் ரமேஷ் | படம்: இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

சென்னை: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜியோ ஸ்டார் நிபுணரான அவர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம்.

‘தம்பி’ என பாசத்தோடு மைக்கில் தனது என்ட்ரியை சடகோபன் ரமேஷ் கொடுப்பது வழக்கம். அப்போது இந்திய கிரிக்கெட் அணியில் சக வீரர்கள் உடனான மறக்க முடியாத அவர் தருணங்களை பகிர்வார்.

“நடப்பு ஐபிஎல் சீசனில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்றால் அது தோனியின் விக்கெட் கீப்பிங் தான். மும்பையின் சூர்யகுமார் யாதவ், பெங்களுருவில் பிலிப் சால்ட்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். அது எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று. 43 வயதானாலும் அவரது கைகளுக்கு 15 வயது என சொல்வது போல இருந்தது. அதேபோல டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் அற்புதமாக இருந்தது.

வர்ணனையை பொறுத்தவரையில் நாங்கள் வீட்டில் எப்படி பேசுகிறோமோ அப்படி தான் பேசி வருகிறோம். வேலை பளு தெரியாமல் இந்த பணியை செய்கிறோம். கிரிக்கெட் குறித்த விவாதம் போல தான் அது இருக்கும். கிரிக்கெட் உணர்வுப்பூர்வமான இணைப்பை கொண்டது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கிரிக்கெட்டை பின் தொடர்வார்கள். ‘நீங்கள் சொன்னதால் தான் அவர் அவுட் ஆனார்’ என்பது மாதிரியான விமர்சனங்கள் சில நேரங்களில் ரசிகர்கள் தரப்பில் இருந்து வரும். அதை கடந்து வர வேண்டும். அது சவாலானது.

பணியை மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து செய்வோம். ஒரு முறை நேரலையில் ஷோவில் பேசிக்கொண்டு இருந்த போது எனது போன் ஒலித்தது. அப்போது நாங்கள் ஸ்ரேயஸ் ஐயர் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். நான் என்ன செய்தேன் என்றால். எனது போனை எடுத்து ஸ்ரேயஸ் உடன் பேசுவது போலவே அந்த அழைப்பை ஏற்று பேசினேன். அப்போது சக வர்ணனையாளர்கள் உடன் சேர்ந்து சுமார் 5 நிமிடம் வரை சிரித்துக் கொண்டே அந்த ஷோவை செய்தோம். அது மறக்க முடியாது மகிழ்ச்சியான தருணம்.

எனது குரலை வைத்தே மக்கள் இப்போது என்னை அடையாளம் காண்கிறார்கள். நான் வாடகை வாகனத்தில் செல்லும் போது போனில் பேசினால் ‘சார், நீங்கள் ரமேஷ் தானே’ என கேட்கின்றனர். தமிழ் வர்ணனையில் இது எங்களுக்கு கிடைத்துள்ள ரீச் என்றும் சொல்லலாம். கரோனா சமயத்தில் முகக்கவசம் அணிந்திருந்த போது கூட எனது குரலை வைத்து ஒருவர் அடையாளம் கண்டார். அதுவும் மறக்க முடியாதது” என தனது வர்ணனை அனுபவங்களை பகிர்ந்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 2013 ரன்களை சடகோபன் ரமேஷ் எடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in