ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: குல்வீர், பூஜா, நந்தினி தங்கம் வென்று அசத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: குல்வீர், பூஜா, நந்தினி தங்கம் வென்று அசத்தல்
Updated on
1 min read

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர், தொடக்க நாளில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார்.

தாய்லாந்தின் கீரன் டன்டிவேட் (13:24.97) வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் நாகியா மோரி (13:25.06) வெண்கல பதக்கமும் பெற்றனர். மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் சஃபினா சாதுல்லேவா (1.86மீ) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

ஹெப்டத்லானில் இந்தியாவின் நந்தினி அகசரா 5,941 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சீனாவின் லியு ஜிங்கி 5,869 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் பாருல் சவுத்ரி 9:12.46 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இதுவரை இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in