

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் என்ற வலது கை பேட்ஸ்மெனை இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக தேர்வு செய்துள்ளனர்.
சிறிது காலமாக ஒருநாள் போட்டிகளில் கேப்டன் குக்குடன் தொடக்க வீரராக இயன் பெல் களமிறங்கி வந்தார். இந்தியாவுக்கு எதிராக தற்போது அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்குவார். முதன்முதலாக ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் இங்கிலாந்துக்காக ஆடவுள்ளார்.
இவர் பவுண்டரிகள், சிக்சர்களுக்குப் பெயர் பெற்றவர். 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 32 ஆட்டங்களில் 5ஆம் நிலையில் களமிறங்கி 1022 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 116 நாட் அவுட். மேலும் 7 அரைசதங்களை எடுத்துள்ளார். 1022 ரன்களில் 109 பவுண்டரிகள், 31 சிக்சர்களை விளாசியுள்ளார். அதாவது 1022 ரன்களில் பாதிக்கு மேல் பவுண்டரிகள் சிக்சர்களிலேயே அவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 3 வாரங்களில் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் நாட்டிங்கம் ஷயர் அணிக்காக 3 ஒருநாள் சதங்களை அடித்ததால் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக 96 பந்துகளில் எடுத்த 141 ரன்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது.
இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணி வருமாறு:
அலிஸ்டர் குக், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பாலன்ஸ், இயன் பெல், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், ஹேரி கர்னி, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயான் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்