“வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் உடன் ஒப்பிடாதீர்” - ஸ்டீவ் வாஹ் சொல்லும் காரணம்

“வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் உடன் ஒப்பிடாதீர்” - ஸ்டீவ் வாஹ் சொல்லும் காரணம்
Updated on
1 min read

14 வயதில் ஐபிஎல் சதம் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி புள்ளிவிவரங்களை மாற்றி எழுத வைத்தவர் என்ற அளவில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார். கிரிக்கெட் ஜாம்பவானும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் வாஹ் கூட வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டியுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்துள்ளார்.

18 வயதில் ஆஸ்திரேலியாவின் அதிவேக பெர்த் பிட்சில் சதம் எடுத்தவர் சச்சின், அதுவும் ஆஸ்திரேலியாவின் பெரிய மிரட்டல் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக என்றால் அது சாதாரணத் திறமை அல்ல என்கிறார் ஸ்டீவ் வாஹ். ஏனெனில், பெரிய பெரிய ஜாம்பவான் பேட்டர்களெல்லாம் பெர்த் அதிவேக பவுன்ஸ் பிட்சில் சோபிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஆனால், சச்சின் 18 வயதில் பெர்த்தில் பிரமாதமாக ஆடி அசத்தியவர். லெஜண்ட்களையே மூக்கின் மீது விரல் வைக்கச் செய்தவர்.

1992-ம் ஆண்டு பெர்த்தில் அதிவேக பவுன்ஸ் பிட்சில் 161 பந்துகளில் 114 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர், மற்ற இந்திய வீரர்களுக்கு அது ஒரு பிட்ச் என்றால் சச்சின் டெண்டுல்கருக்கு அது வேறு வகையான பிட்ச் ஆக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் 18 வயதில் சதம் கண்ட, அதுவும் பெர்த்தில் சதம் கண்ட அதிசய வீரர் என்ற சாதனையையும் புகழையும் அடைந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைபவ் சூர்யவன்ஷி பற்றி ஸ்டீவ் வாஹிடம் கேட்டபோது, “சச்சின் டெண்டுல்கரை எவருடனும் ஒப்பிட வேண்டாம். ஒரு சிறுவன் (18 வயது), ஆஸ்திரேலிய மண்ணில், அதுவும் பெர்த்தில் சதம் எடுப்பதெல்லாம் முடியாத காரியம். பெர்த் உலக கிரிக்கெட்டில் தனிச்சிறப்பு வாய்ந்த பிட்ச்.

அங்கு விளையாடுவதில் பல ஜாம்பவான்களும் தோல்வி அடைந்துள்ளனர். அந்தப் பிட்சில் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதம் மறக்க முடியாதது. சச்சின் டெண்டுல்கர் போல் ஒரு கிரிக்கெட் வீரர் வருவது மிக மிக அரிதே. ஆனால், அதே சமயத்தில் 14 வயது சிறுவன் ஐபிஎல் சதம் அடிப்பார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைதான்.

நான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் 14 வயதில் இருந்ததை யோசித்துப் பார்க்கும்போது இத்தகைய சூழலில் இருப்பதையோ, அங்கு இப்படி வெற்றிகரமாக ஆடுவதையோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

சூர்யவன்ஷி இதே ஸ்டைலில் தொடர்ந்து ஆட முடியுமா? இப்படியே தொடர முடியுமா? அதுதான் அவர் முன் இருக்கும் சவால். நிறைய திறமை அவரிடம் உள்ளது. மனதளவில் கடினமாகத் திகழ்கிறார். அவருக்கு பின்புலம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷியின் கதை அருமையானது” என்றார் ஸ்டீவ் வாஹ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in