ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். 25 வயதான ஷுப்மன் கில் வரவிருக்கும் தொடரில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் இளம் வீரர் இவராவார். அதேபோல இந்தத் தொடரில் புதிய துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ராவிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணி எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது..

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெறும். ஜூலை 10-ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரின் நான்காவது டெஸ்ட் ஓல்ட் டிராஃபோர்டு மைதானம் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in