Published : 16 Jul 2018 01:05 PM
Last Updated : 16 Jul 2018 01:05 PM

உலக கோப்பை வெற்றி: வரம்பு மீறிய ரசிகர்கள்; வன்முறையில் முடிந்த கொண்டாட்டம்- 2 பேர் பலி

உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பை வென்ற மகிழ்ச்சியை பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கொண்டாட்டம் வரம்பு மீறி வன்முறையாக வெடித்தது. கொண்டாட்டங்களில் 2 பேர் பலியாகினர்.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின.

இந்த போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 1998-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது.

 

அதேவேளையில் முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் குரோஷியா அணியின் கனவு நிறைவேறாமல் போனது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.257 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அதேவேளையில் 2-வது இடம் பெற்ற குரோஷியா அணி ரூ.191 கோடி பரிசுத் தொகையை பெற்றது.

களைகட்டிய கொண்டாட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றதை பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொது இடங்களில் திரண்டு கால்பந்து ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பாரீஸ் நகர வீதிகளில் திரண்ட ரசிகர்கள் ஆடிபாடி கொண்டாடினர். முகமூடியை அணிந்தும், தேசியக்கொடியையும் ஏந்த வந்த ரசிகர்கள் வாகனங்களை நிறுத்தி சாலையில் ஆடிபாடினர். இதையடுத்து பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கொண்டாட்டத்தின் போது, சிலர் மதுபானங்களை அருந்தியதால் போதை மிகுதியுடன் வரம்பு மீறி நடந்து கொண்டனர். இந்த பரபரப்பால் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சில ரசிகர்கள் மதுபான கடைகளை உடைத்து உள்ளே இருந்த மதுபான பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

ரசிகர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் சில இடங்களில் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். வேறு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சியடித்தும் கூட்டத்தை போலீஸார் கலைத்தனர்.

வாகனம் மீது தாக்குதல்

அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்தக் கூட்டம் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டது. பாரீஸ் மட்டுமின்றி லியோன் உள்ளிட்ட நகரங்களிலும் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது. நள்ளிரவு வரை ரசிகர்கள் கூடி கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களை கலைப்பதற்கு போலீஸார் பெரிதும் சிரமப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வன்முறை கும்பல் தாக்குதலில் காயமடைந்தனர்.

சாலையில் மதுபான பாட்டில்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். லியானில் உள்ள சிட்டி சென்டர் பகுதியில் நூற்றுக் கணக்கானோர் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை போலீஸார் கலைத்தனர்.

file711552ysg2g104ghvei0153172jpg100 

2 பேர் பலி

இதுகுறித்து பிரான்ஸ் போலீஸார் கூறுகையில் ‘‘இது கொண்டாட்டம் அல்ல. வரம்புமீறி நடந்து கொள்ளும் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு உள்ளது. எனவே தான் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டிய தேவை ஏற்பட்டது’’ எனக் கூறினர்.

ஆல்பின் நகரில் ரசிகர் ஒருவர் உற்சாகத்தில், கால்வாயில் குதித்த போது அவரது கழுத்து முறிந்து பலியானார். இதுபோல் செயின்ட்-பெலிக்ஸ் நகரில், ரசிகர்கள் சிலர் ஆடிப்பாடிக் கொண்ட காரில் சென்றனர். அந்த காரை ஓட்டிச் சென்ற 30-வது வயது ரசிகர் உற்சாக மிகுதியில் தாறுமாறாக கார ஓட்டினார். அப்போது கார் மரத்தில் மோதி அவர் உயிர் இழந்தார். காரில் இருந்த மற்றவர்கள் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x