12-வது சீசனுக்கான ஏலத்தையொட்டி புரோ கபடி லீக்கில் 83 வீரர்கள் தக்கவைப்பு

12-வது சீசனுக்கான ஏலத்தையொட்டி புரோ கபடி லீக்கில் 83 வீரர்கள் தக்கவைப்பு
Updated on
1 min read

புரோ கபடி லீக் சீசன் 12-க்கான வீரர்கள் ஏலம் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

எலைட் பிரிவில் 25 வீரர்கள், இளம் வீரர்கள் பிரிவில் 23 பேர், புதிய இளம் வீரர்கள் பிரிவில் 35 பேர் என மொத்தம் 3 பிரிவுகளில் 83 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சுனில் குமார் மற்றும் அமீர்முகமது ஜாபர்தனேஷ் (யு மும்பா), ஜெய்தீப் தஹியா (ஹரியானா ஸ்டீலர்ஸ்), சுரேந்தர் கில் (யுபி யோதாஸ்), மற்றும் புனேரி பல்டான் ஜோடியான அஸ்லாம் இனாம்தார் மற்றும் மோஹித் கோயத் ஆகியோர் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களான பவன் செஹ்ராவத், அர்ஜுன் தேஷ்வால், அஷு மாலிக் மற்றும் புரோ கபடி லீக் சீசன் 11-ன் சிறந்த ரைடர் தேவங்க் தலால் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஈரானிய வீரர்களான ஃபசல் அட்ராச்சாலி மற்றும் முகமதுரேசா ஷாட்லூய் ஆகியோர் புரோ கபடி லீக்கின் மூத்த வீரர்களான மனிந்தர் சிங் மற்றும் பர்தீப் நர்வாலுடன் சீசன் 12-க்கான ஏலத்தில் நுழைகின்றனர்.

ஸ்டார் ரெய்டர் நவீன் குமார் முதல் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட உள்ளார். புரோ கபடி லீக் 8-வது சீசனின் வெற்றியாளரான அவர், ஆறு சீசன்களில் தபாங் டெல்லி அணிக்காக 1,102 ரெய்டு புள்ளிகளை பெற்றுள்ளார். புரோ கபடி லீக் வரலாற்றில் ஆயிரத்துக்கும் அதிகமான புள்ளிகளை குவித்த வீரர் இடம் ஏலப்பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஏலத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏ, பி, சி, மற்றும் டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பிரிவிலும், வீரர்கள் 'ஆல்-ரவுண்டர்கள்', 'டிஃபென்டர்கள்' மற்றும் 'ரைடர்ஸ்' என வகைப்படுத்தப்படுவார்கள்.

ஏ பிரிவில் இடம் பெறுவர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சம் எனவும், பி பிரிவில் ரூ.20 லட்சம் எனவும், சி பிரிவில் ரூ.13 லட்சம் எனவும், டி பிரிவில் ரூ.9 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுளளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை வாங்க ரூ.5 கோடி செலவழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in