Published : 27 Jul 2018 09:19 PM
Last Updated : 27 Jul 2018 09:19 PM

பவுன்சரைப் போட்டு சேவாகை காலி செய்து விடுவார்கள் என்று கேலி பேசினர்: சேவாக், தோனியை செதுக்கி வளர்த்தது பற்றி கங்குலி ருசிகரப் பதிவு

இந்தியக் கிரிக்கெட்டில் இரு பெரும் சாதனையாளர்களான வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்ததிலும், செதுக்கியதிலும் முன்னாள் கேப்டன், வீரர் சவுரவ் கங்குலிக்கு முக்கியப்பங்கு உண்டு

இந்தியக் கிரிக்கெட்டில் கேப்டன்களாக இருந்தவர்களில் கங்குலியின் காலம் என்பது மிக அற்புதமான காலமாகும். இளைஞர்கள் அதிகமானோர் வெளிக்கொண்டு வரப்பட்டனர். அதிகமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறத் தொடங்கி இருந்த காலம்.

இளம் வீரர்களில் குறிப்பாக சேவாக், தோனி ஆகியோரின் திறமையை அடையாளம் கண்டு மெருகேற்றியது கங்குலிதான் என்பதில் மறுப்பதற்கில்லை. நடுவரிசையில் பேட் செய்த சேவாக்கை சிறந்த தொடக்க ஆட்டக்காரர மாற்றியதும், 7-வது வீரராக இறங்கிய தோனியை 3-வது வீரராகக் களமிறக்கி கிரிக்கெட் உலகையே திரும்பிப்பார்க்க வைத்ததும் கங்குலிதான்.

இந்தச் சம்பவங்களை சவுரவ் கங்குலி “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார். அது குறித்த விவரம் வருமாறு:

வெளிநாட்டுக்குப் பயணம் செல்லும் இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கை முதன்முறையாக நான் தேர்வு செய்தேன். அப்போது தேர்வாளர்கள் என்னிடம் பவுன்சர்களை ஆடத்தெரியாத பேட்ஸ்மேன் சேவாக்கை ஏன் வெளிநாட்டு பயணத்துக்கு தேர்வு செய்தாய்?.

சேவாக் வெளிநாட்டுப் பயணத்தில் பேட் செய்தால், பவுன்சரை தலையில்போட்டு உட்காரவைத்து விடுவார்கள் என்று கிண்டல் செய்தார்கள்.

நான் அவர்களிடம் கூறினேன், “சேவாக் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவுக்கு வராதீர்கள். அவருக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்” என்றேன்.

அதன்பின் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முதன்முதலாக அழைத்துச் செல்லப்பட்ட சேவாக், அங்கு சதம் அடித்து அனைவரின் வாயை அடைத்தார். அவரின் சதத்தைப் பார்த்தபின் அவரை நடுவரிசையில் சேவாக்கை களமிறக்க எனக்கு விருப்பமில்லை.

ஒருநாள் சேவாக்கை அழைத்தேன், “நீங்கள் ஏன் தொடக்க வீரராகக் களமிறங்கக்கூடாது?” என்றேன். நானா, நான் எப்படி களமிறங்குவேன் என்றார்.

அதற்கு “தொடக்க வீரராக களமிறங்கும் திறமை பிறக்கும்போதே யாருக்கும் வரவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ளலாம். மாத்யூ ஹேடன், லாங்கர் தொடக்கவீரர்களாக இருக்கும் போது, உங்களால் ஏன் விளையாட முடியாது” என்று நான் கூறினேன்.

“ நான் இதுநாள்வரை 5 அல்லது 6-ம் இடத்தில்தான் களமிறங்கி இருக்கிறேன். நான் ஆட்டமிழந்துவிட்டால் என்ன செய்வது” என்று சேவாக் மறுத்தார்.

அதற்கு “நீங்கள் மிடில்ஆர்டரில் களமிறங்கினால்கூட ஆட்டமிழக்கத்தான் போகிறீர்கள். நான் கடைசிவரிசையில் களமிறங்குகிறேன், நீங்கள் ஆட்டத்தைத் தொடங்குகள்” என்றேன். அதன்படி இங்கிலாந்து தொடரில் தொடக்கவீரராக களமிறங்கி சேவாக் சதம் அடித்தார்.

அதுமட்டுமல்லாமல், “ நீங்கள் மிடில்ஆர்டரில் களமிறங்கினால், என்னுடன் சேர்ந்து ஒருபோதும் விளையாட முடியாது. போட்டியை வென்று கொடுக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது. அது மிடில் ஆர்டரில் களமிறங்கினால் வராது” என்ற சேவாக்கை ஆறுதல் படுத்தினேன்.

இதேபோன்றுதான் தோனியையும் நான் செதுக்கினேன். “ 2004-ம் ஆண்டு தோனி அறிமுகமாகும்போது, அவர் 7-வது வரிசையில்தான் 2 போட்டிகளுக்கு களமிறங்கி பேட் செய்தார். விசாகப்பட்டிணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். தோனியின் திறமையான பேட்ஸ்மேன் என்றெல்லாம் செய்திகளிலும், நாளேடுகளிலும் வந்திருந்தது. இதைப் படித்து தோனியின் திறமையை எப்படி வெளிக்கொணர்வது” என்று திட்டமிட்டேன்.

மறுநாள் காலை, எங்களுடைய பயிற்சி முடிந்தபின், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸில் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தோம். ஓய்வறைக்கு திரும்பி பேட்டிங் வரிசையை திடீரென்று மாற்றினேன். எனக்கு ரிசல்ட் மிக அருமையாகக் கிடைத்தது.

தோனி தான் 7-வது வீரராகத்தான் களமிறங்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஷார்ட்ஸ்போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். நான் உடனே “ தோனி, நீங்கள் 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கப்போகிறீர்கள், தயாராகுங்கள்” என்றேன்.

உடனே தோனி, “அப்படியென்றால், நீங்கள் எந்தவரிசையில் விளையாடுவீர்கள்” என்று கேட்டார். அதற்கு “ நான் 4-வது வீரராக களமிறங்கிக்கொள்கிறேன் நீங்கள் தயாராகுங்கள்” என்று தோனியிடம் தெரிவித்தேன்.

அந்தப் போட்டியில் தோனி அடித்த 148 ரன்கள் மூலம் கிரிக்கெட் உலகம் அவரைத் திரும்பிப்பார்த்தது. இப்படித்தான் இந்த இரு வீரர்களின் திறமையையும் பட்டைத் தீட்டி உருவாக்கினேன்.

தோனி மிகவும் துணிச்சலானவர். நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், கிழக்கு மண்டலத்தில் இருந்து வீரர்கள் யாரும் இந்திய அணியில் இல்லை. கிழக்குமண்டலத்தில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை, அவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூட சிந்திக்கவில்லை.

அதன்பின் நாங்கள் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், கேப்டன்களாக இருவரும் பணியாற்றி இருக்கிறோம்.

கார்டிப் நகரில் நான் எனது 500-வது போட்டியை விளையாடுகிறேன் என நினைக்கிறேன். ஒரே அணியில் முன்னாள், நடப்பு கேப்டன் விளையாடுவது அரிதானது. அந்த வகையில் நானும், தோனியும் ஒன்றாக விளையாடியது பெருமைக்குரியது.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x