Published : 05 Jul 2018 09:06 AM
Last Updated : 05 Jul 2018 09:06 AM

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சென்னை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கவுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள புரோ கோச் யார்க் ஷையர் அகாடமி சார்பில் 17 வயதுக்குட்பட்டோர் சர்வதேச ஜூனியர்ஸ் அகாடமி கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. இது 20 ஓவர் போட்டியாகும். வரும் 9-ம் தேதி இந்தப் போட்டி கோலாகலமாகத் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் சென்னை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கவுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளோடு சென்னையைச் சேர்ந்த அணியும் கலந்து கொள்கிறது. அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியின் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அம்பாட்டி ராயுடு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. அணியினருடன் அம்பாட்டி ராயுடுவும் பயணிக்கவுள்ளார். அணியின் பயிற்சியாளராக எஸ். ஷரத் இருப்பார். இந்தப் போட்டியின்போது பிரிஸ்பேன் எச்டிஎஸ் அகாடமி, கலிபோர்னியா கிரிக்கெட் அகாடமி, புரோ கோச் யார்க் ஷையர் அகாடமி ஆகிய அணிகளுடன் சென்னை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது. வடக்கு யார்க் ஷையரில் உள்ள அம்பிள்போர்த் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறும்போது, “சென்னை ஜூனியர் கிங்ஸ் அணிக்கு இந்த போட்டி மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். இங்கிலாந்து போட்டியில் நமது வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

அம்பாட்டி ராயுடு கூறும்போது, “இந்தப் போட்டியில் பங்கேற்கும் சென்னை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் சிறப்பாகவும் விளையாடவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x