Last Updated : 20 Jul, 2018 06:43 PM

 

Published : 20 Jul 2018 06:43 PM
Last Updated : 20 Jul 2018 06:43 PM

ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ: சேவை பிடித்துப்போனதால் வாரி வழங்கினார்

 போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா விடுமுறைக்காகத் தங்கி இருந்த ஹோட்டலின் சேவை பிடித்துப்போனதால், ஊழியர்களுக்கு ரூ.16 லட்சத்தை டிப்ஸாக வழங்கியுள்ளார்.

பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து, போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, கிரீஸ் நாட்டில் உள்ள பிலிபோனிஸ் தீவில் உள்ள கோஸ்டா நவாரினோ ரிசார்ட்டில் நண்பர்கள், குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்தார்.

ரொனால்டோவும் அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தங்கி இருந்தபோது, அந்த ஹோட்டலின் ஊழியர்களும், அவர்கள் அளித்த சேவையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனால், ஹோட்டலை விட்டுக் கிளம்பும் போது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று குடும்பத்தினருடன் அடிக்கடி கூறியுள்ளார்.

அதற்கேற்றார்போல், ஹோட்டலை விட்டு இத்தாலி நாட்டுக்குப் புறப்படும் முன் ஹோட்டல் ஊழியர்களுக்கு 23 ஆயிரம் அமெரிக்கன் டாலர் (ரூ.16 லட்சம்) டிப்ஸாக வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ இந்த ஆண்டு முதல் இத்தாலியின் ஜுவன்டிஸ் கிளப்புக்காக விளையாட உள்ளார். அதற்காக 117 மில்லியன் டாலருக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது ஜுவன்டிஸ் கிளப்.

அதுமட்டுமல்லாமல், இந்த சீஸனில் ரொனால்டாவை வைத்து ஜுவன்டிஸ் கிளப் குறைந்தபட்சம் 300 மில்லியன் யூரோக்களை சம்பாதித்துவிடும் என்றுசர்வதேச வர்த்தக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

33 வயதான ரொனால்டோ ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸாக அளித்தது அவரின் மனிதநேயத்தைக் காட்டிலும், கடந்த காலங்களைப் பார்த்தால், அவர் ஏழைகளுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டபோது, மார்டினிஸ் என்ற சிறுவன் குடும்பத்தை இழந்து, ரொனால்டோவின் 7-ம் எண் ஜெர்சியை அணிந்து 19 நாட்கள் அனாதையாக இருந்தான். இதை அறிந்த ரொனால்டோ இந்தோனேசியாவில் புனரமைப்புப் பணிகள் நடக்க நிதி திரட்டிக் கொடுத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற சிறுவர்களுக்கு நிதி உதவி அளித்தும், மருத்துவமனைகள் எழுப்பவும் உதவி செய்துள்ளார் ரொனால்டோ. கடந்த 2012-ம் ஆண்டு கால்பந்துப் போட்டியில் தான் பரிசாகப் பெற்ற தங்க காலணியை விற்று காஜா நகரில் பள்ளிக்கூடம் அமைக்க ரொனால்டோ உதவினார்.

மேலும், எச்ஐபி, மலேரியா, எபோலா, உடல்பருமன் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் தூதராகவும் செயல்பட்டு ரொனால்டோ பிரச்சாரம் செய்துள்ளார். குழந்தைகள் நலனிலும், ஏழைகளின் நலனிலும் அக்கறை கொண்ட ரொனால்டோ ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x