சூர்யவன்ஷி டக் அவுட்: ராஜஸ்தானை 100 ரன் வித்தியாசத்தில் சுருட்டிய மும்பை | ஐபிஎல் 2025

சூர்யவன்ஷி டக் அவுட்: ராஜஸ்தானை 100 ரன் வித்தியாசத்தில் சுருட்டிய மும்பை | ஐபிஎல் 2025

Published on

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர்.

இதில் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும் விளாசி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். சூர்யகுமார், ஹரிதிக் பாண்டியா இருவரும் தலா 48 ரன்கள் என 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் குவித்தது மும்பை அணி.

218 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங்க் வீரர்களாக ஜெய்ஸ்வாலும் கடந்த போட்டியில் 101 ரன்கள் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வைபவ் சூர்யவன்ஷியும் இறங்கினர். ஆனால் பெரிய தாக்கத்தை தருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்திருந்தார்.

மும்பையின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழவே ராஜஸ்தான் அணி இலக்கை எட்ட தடுமாறியது. அதிகபட்ச ஸ்கோராக ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டுமே 30 ரன்கள் எடுத்தார். 16 ஓவர்களில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்று முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது. இன்னொருபுறம் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in