நடப்பு சீசனில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - IPL 2025

நடப்பு சீசனில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - IPL 2025
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதன்கிழமை அன்று சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்தது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 200+ ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19-வது ஓவரை சஹல் வீசி இருந்தார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் பிரியன்ஷ் ஆர்யார் மற்றும் பிரப்சிம்ரன் சிங். 23 ரன்கள் எடுத்து பிரியன்ஷ் ஆட்டமிழந்தார்

பின்னர் வந்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் உடன் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பிரப்சிம்ரன் சிங். 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 5 ரன்களில் வெளியேறினார்.

அருமையாக இலக்கை விரட்டிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், 42 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஷாங் சிங், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷெக்டே 1 ரன்னில் அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in