Published : 28 Apr 2025 07:49 AM
Last Updated : 28 Apr 2025 07:49 AM
மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய வீரர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும், இந்திய கிரிக்கெட் அணியினர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.
இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. மேலும், 2025 - 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி, இங்கிலாந்து தொடரில் இந்திய வீரர்கள் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயலாற்றும் பட்சத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தத் தொடரில் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர்.
பும்ரா விஷயத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மிக கவனத்துடன் செயல்படவேண்டும். இந்தத் தொடரில் அவரை அதிக போட்டிகளில் பயன்படுத்தினால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரை 2 போட்டிகளிலோ அல்லது 5 போட்டிகளிலோ விளையாட வைக்க நிர்வாகம் விரும்புகிறது.
அவர் அப்படி விளையாட வைத்தால்தான் அவருடைய உடல் பாதிப்பை சந்திக்கும். எனவே, அவருக்கு லேசான காயம் இருந்தாலும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்வதற்கான உரிமை ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தரப்பட வேண்டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளையாடி சிறப்பாக செயலாற்றும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT