Published : 23 Apr 2025 10:01 AM
Last Updated : 23 Apr 2025 10:01 AM
சென்னை: சென்னையில் நடைபெற்ற விழாவில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்தை சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்கினார்.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மற்றும் சிஎஸ்கே சார்பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சிஎஸ்கே ஆகியவை சார்பில் ரூ.3 லட்சம், சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே சார்பில் ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே 10 நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் உதவித்தொகையை வழங்கினார்.
பி.பி.அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கே.எஸ்.வெனிசா (வில்வித்தை), முத்துமீனா வெள்ளசாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ்(ஸ்குவாஷ்), எஸ்.நந்தனா (கிரிக்கெட்), பி.கமலி (அலைச்சறுக்கு), ஆர்.அபிநயா (தடகளம்), ஆர்.சி.ஜிதின் அர்ஜுனன் (தடகளம்), ஏ.தக்சந்த் (செஸ்), ஆர்.கே.ஜெயந்த் (கிரிக்கெட்) ஆகிய 10 பேர் தலா ரூ.1 லட்சம் உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியதாவது: சிஎஸ்கே அணியின் செயல்பாடு உங்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். வரும் நாட்களில் எங்கள் அணி சிறப்பாக ஆடும். எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவிச் செயலர் ஆர்.என்.பாபா, முன்னாள் இந்திய அணி வீரர் ராபின் சிங், எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷன் தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன், முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT