3% இடஒதுக்கீட்டின் கீழ் 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வர் உதயநிதி தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ, விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலளித்து பேசியதாவது: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஆண்டு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் காவல் துறையில் 11 பேர் சேர்ந்துள்ளனர். தற்போது காவல் துறையில் 32 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விரைவில் இரண்டாம் நிலை காவலர் பொறுப்புக்கும் அந்த விண்ணப்பங்கள் கோரப்படும்.

கடந்த வாரம்கூட, மாற்றுத் திறனாளிகளை ஊராட்சி அமைப்புகளில் நியமனம் செய்வதற்கான சட்டமுன்வடிவை இந்த அவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சுமார் 13 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வரவிருக்கின்றார்கள்.

இதற்காக மாற்றுத்திறனாளிகள் முதல்வரையும், என்னையும் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, ‘இத்தனை நாட்களாக கேட்கும் இடத்திலிருந்த நாங்கள், முதன்முதலாக கொடுக்கும் இடத்துக்கு வரப்போகிறோம்’ என்றனர். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுன்டேஷன் மூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.

இதுவரை 198 பாரா விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் ரூ.4.50 கோடி செலவு செய்திருக்கிறோம். அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு, மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, இதுவரை 196 பாரா வீரர்களுக்கு ரூ.27 கோடி வழங்கியுள்ளது. இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ள நிலையில், அதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in