

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் வீரர் ஜாஸ் பட்லர் 97 ரன்கள் எடுத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கருண் நாயர் 31, ராகுல் 28, அக்சர் படேல் 39, ஸ்டப்ஸ் 31, அசுதோஷ் சர்மா 37 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டியது. சாய் சுதர்ஷன் உடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த ஷுப்மன் கில், 7 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
பின்னர் வந்த ஜாஸ் பட்லர் உடன் இணைந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாய் சுதர்ஷன். 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரூதர்போர்ட் உடன் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரூதர்போர்ட், 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 97 ரன்கள்: குஜராத் அணிக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட பட்லர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். இந்த சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது.