

கேப்டன் கூல் தோனி அவ்வளவு கூல் அல்ல என்பதற்கு மேலும் ஓரு உதாரணமாகவும், எதையும் தனித்துவமாகச் செய்வதில் தோனியின் பாணி கவனத்துக்குரியதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதுமானது என்பதை பரத் சுந்தரேசன் என்பவர் தனது புதிய புத்தகமான The Dhoni Touch என்பதில் விவரித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள சுவையான தகவல்கள் சில:
2008-ல் காமன்வெல்த் பேங்க் ஒருநாள் தொடரில் பாண்டிங் தலைமை ஆஸ்திரேலியா 159 ரன்களுக்கு மடிந்தது, இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு எனும்போது வெற்றி பெற இன்னும் 10 ரன்கள் உள்ள நிலையில் களத்தில் இருந்த தோனி கிளவ் வேண்டும் என்று செய்கை செய்தார், அது கிளவ்வுக்காக அல்ல, மாறாக போட்டியை வென்றவுடன் பால்கனியில் காட்டுத்தனமாக கொண்டாட வேண்டாம் என்பதற்காகவே.
அதே போல் ஆஸி.வீரர்கள் கைகொடுக்கும் போது உறுதியாக நின்று கண்களை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க வேண்டும், அவர்கள் ஏதோ நமக்கு சகாயம் செய்வது போல் கையைத் தளர்வாக வைத்துக் கொண்டு கொடுக்கக் கூடாது என்று ரோஹித் சர்மாவுக்கு இதே போட்டியில் தோனி அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் நாம் அதிகப்படியாக இந்த வெற்றியைக் கொண்டாடினால் அவர்கள் ஏதோ இந்தப் போட்டியில் ஏமாற்றமாக தோல்வி அடைந்து விட்டது போல் காட்டிக் கொள்வார்கள். இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும், நடக்கும் என்பதை அறிவுறுத்துவதாக கைகுலுக்கல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதே தோனியின் கருத்தாக இருந்துள்ளது. அதாவது நாங்கள் ஏதோ அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவில்லை இதனை தொடர்ந்து உங்களுக்குச் செய்வோம் என்பதாக கைகுலுக்கல் இருக்க வேண்டும் என்பதுதான் தோனியின் தனிப்பாணி என்று விவரிக்கிறார் பரத் சுந்தரேசன்.
அதே போல் எதிரணி ஸ்லெட்ஜ் செய்தால் அதை வீரர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்துபவர் அல்லவாம். இதிலும் ஒரு தனிப்பாணி வேண்டும் என்று நினைப்பவர் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
உதாரணமாக ஆஸ்திரேலியர்களோ, அல்லது எந்த அணியோ எதிரணி வீரர்களின் தாயையோ, சகோதரியையோ இழுத்து ஆபாசமாக வசைபாடினால் அதே பாணியில் நாமும் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பாராம் தோனி. ஏனெனில் மைதானத்தில் வசையை ஒரு பொழுதுபோக்காக, உத்தியாகக் கடைபிடிப்பவர்களைக் கையாள நாமும் அவர்களது தாய், சகோதரியை வசை பாடுவது கூடது என்பாராம் தோனி. இது பற்றி தோனியின் நண்பர் ஒருவர் கூறுவதாக அந்த நூலில் அவர் குறிப்பிடும்போது, “தோனி ஆக்ரோஷத்தை கன்னாபின்னாவென்று காண்பிப்பதில் நம்பிக்கையற்றவர். அவர்களைக் காயப்படுத்த வேண்டுமா, அதை உங்கள் பாணியில் செய்யுங்கள், அவர்கள் பாணியில் செய்யாதீர்கள்” என்பதே தோனியின் ஆலோசனையாக இருக்குமாம்.
மோதலே கூடாது என்பது தோனியின் கொள்கை இல்லை, வீரர்கள் அதில் ஈடுபடும் போது அவர் தடுப்பதும் இல்லை, ஆனால் தனிமனிதத் தாக்குதல் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவராம் தோனி.
இவ்வாறு பரத் சுந்தரேசன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.