Published : 18 Apr 2025 06:54 AM
Last Updated : 18 Apr 2025 06:54 AM
பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. எனினும் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி 4-வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தன. ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் 174 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 15 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 111 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் அபாரமான பந்து வீச்சால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.
ஆர்சிபி அணியின் 4 வெற்றிகளுமே வெளி மைதானங்களில் கிடைக்கப்பெற்றவையாகும். சொந்த மைதானத்தில் அந்த அணி இரு ஆட்டங்களில் விளையாடி தோல்வியையே சந்தித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்ந்திருந்தது.
இந்த இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரன்கள் சேர்க்க தடுமாறியிருந்தது. குஜராத் அணியின் சாய் கிஷோர் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், டெல்லி அணியின் குல்தீப் யாதவ் 17 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், விப்ராஜ் நிகாம் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் யுவேந்திர சாஹல், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் முக்கியமான கட்டத்தில் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களை பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ள தூண்டி அவர்களை ஆட்டமிழக்கச் செய்யும் யுக்தியை சாஹல் கையாண்டிருந்தார். மேலும் பந்து வீச்சின் வேகம், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசுவது என பல்வேறு மாறுபாடுகளையும் செய்திருந்தார். அதே பாணியை அவர், ஆர்சிபிக்கு எதிராகவும் பயன்படுத்தக்கூடும்.
மேக்ஸ்வெல்லும் இதேபோன்று செயல்படக்கூடியவர்தான். ஆடுகளத்தில் பந்துகள் சுழலாவிட்டாலும் கட்டுப்பாடுடன் வீசும் திறன் கொண்ட மேக்ஸ்வெல், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவர். பெங்களூரு அணியில் அதிக அளவிலான வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதை மேக்ஸ்வெல் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
சொந்த மண்ணில் தோல்வி அடைந்த இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து முறையே 169 மற்றும் 163 ரன்களே எடுத்திருந்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் அந்த அணி டாஸை வெல்லும் பட்சத்தில் பீல்டிங்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் 65 ரன்கள் விளாசிய பில் சால்ட், 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த விராட் கோலி, 28 பந்துகளில், 40 ரன்கள் விளாசிய தேவ்தத் படிக்கல் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
ரஜத் பட்டிதார் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர். இதனால் அவரது மட்டை வீச்சு சாஹல், மேக்ஸ்வெல்லுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். இதேபோன்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும் சுழலுக்கு எதிராக அற்புதமாக விளையாடும் திறன் கொண்டவர். இதனால் அவர், ஆர்சிபி சுழற்பந்து வீச்சாளர்களான கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT