

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அஸ்வின் மற்றும் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத் மற்றும் ஓவர்டன் சிஎஸ்கே அணியில் விளையாடுகின்றனர்.
லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்க்ரம். ராகுல் திரிபாதி அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து அன்ஷுல் காம்போஜ் வீசிய 4-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் நிக்கோலஸ் பூரன். மார்ஷ் 30 மற்றும் ஆயுஷ் படோனி 22 ரன்கள் எடுத்து வெளியேறினர். அப்துல் சமத் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்களில் 166 ரன்களை எடுத்தது லக்னோ அணி. ஷர்துல், 6 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 167 ரன்கள் தேவை. இதில் வெற்றி பெறுவதன் மூலம் தொடர் தோல்விக்கு சிஎஸ்கே விடை கொடுக்கலாம். சிஎஸ்கே கேப்டன் தோனி, இந்த ஆட்டத்தில் தனது விக்கெட் கீப்பிங் திறனை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தார். கேட்ச், ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் செய்து அவர் அசத்தி இருந்தார்.