

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி கடைசி ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி அணி பந்துவீச முடிவு செய்தது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் விளையாடவில்லை. குஜராத் அணிக்காக ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கில் 60 ரன்கள், சாய் சுதர்சன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் முறையாக ரன் சேர்க்க தவறியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது குஜராத். ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை அவர் இழந்தார். பிஷ்னாய் 2, அவேஷ் மற்றும் திக்வேஷ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். பந்த் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் தரமான பவுலர்களை அவர் பந்தாடினார்.
நிக்கோலஸ் பூரன் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆடிய பதோனி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை மார்க்ரம் வென்றார்.