

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.
சால்ட், 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது பெங்களூரு. சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அந்த அணி அதை தக்கவைத்துக் கொள்ள தவறியது. தேவ்தத் படிக்கல், கோலி, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரஜத் பட்டிதார், க்ருணல் பாண்டியா ஆகியோர் சீரான இடைவேளியில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட், 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். அதன் மூலம் 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. டெல்லி தரப்பில் விப்ராஜ் மற்றும் குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் மோஹித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லி அணிக்கு 164 ரன்கள் தேவை.