Published : 10 Apr 2025 05:22 PM
Last Updated : 10 Apr 2025 05:22 PM
புதுடெல்லி: எதிர்வரும் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் ஆறு கிரிக்கெட் அணிகள் பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட்டில் மொத்தம் 90 வீரர்கள் பங்கேற்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு 15 வீதம் இதில் விளையாட உள்ளனர். இதற்கான ஒப்புதலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அளித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம்பெற உள்ளது. வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. டி20 பார்மெட்டில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறும் என தகவல். அதேபோல இதில் பங்கேற்கும் ஆறு அணிகள் எப்படி தேர்வு செய்யப்பட உள்ளன அல்லது அதற்கான தகுதி சுற்று குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தொடரை நடத்தும் அணி என்ற முறையில் அமெரிக்கா நேரடியாக தகுதி பெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1900 ஒலிம்பிக்கில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடின. இதில் பிரிட்டன் வெற்றி பெற்றது. சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய தொடர்களில் கிரிக்கெட் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. 2022-ல் நடைபெற்ற ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT