Published : 10 Apr 2025 04:01 PM
Last Updated : 10 Apr 2025 04:01 PM

‘ட்ரோல்களை எண்ணி கவலை கொள்வதில்லை’ - அஸ்வின் பேச்சு

சென்னை: ட்ரோல்களை எண்ணி நான் கவலை கொள்வதில்லை, அது அன்பின் வெளிப்பாடு என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. அதனால் பலரும் சிஎஸ்கே செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர். அணி மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனுக்காக அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 5 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இந்த நிலையில் ட்ரோல்கள் குறித்து அஸ்வின் பேசி உள்ளார்.

“ட்ரோல்களை எண்ணி நான் கவலை கொள்வதில்லை. இது ஒரு வகையில் அன்பின் வெளிப்பாடு. இதை ஒரு அணியின் மீது அல்லது வீரர்கள் மீது வைக்கின்ற அன்பு என எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் அப்பா, அம்மா திட்டுவது போல இதை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் தோற்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். அதை கடந்து வருவது குறித்து பேசி வருகிறோம். சில விமர்சனங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும். சில விமர்சனங்களில் வெறும் வன்மம் மட்டும் இருக்கும். அதை நம்மால் அடையாளம் காண முடியும்.

கரோனா காலத்தில் கிரிக்கெட் குறித்து பேசி, வீடியோ பதிவிட துவங்கினோம். நேர்மறை எண்ணங்களை பரப்ப வேண்டுமென்ற நோக்கில் இதை தொடங்கினோம். அதில் இருந்து நாம் இதுவரை தடம் மாறவில்லை.

கடந்த 90-களில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பினால் கடும் அதிருப்தி இருக்கும். கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மீது கல் எறிவார்கள், கொடும்பாவிகளை எரிப்பார்கள். அந்த செயல் சரி என்று நான் சொல்லவில்லை. இப்போது அதை சமூக வலைதளத்தில் ட்ரோல்களாக வெளிக்காட்டுகின்றனர். இதிலிருந்து நாம் எப்படி செல்கிறோம் என்பது தான் முக்கியமானது” என அஸ்வின் கூறியுள்ளார்.

அண்மையில் அஸ்வினின் யூடியூப் சேனலில் ஒரு நிபுணர் வந்து சிஎஸ்கே செலெக்‌ஷனில் தவறு என்று பேசிய பிறகே சமூக ஊடகம் அஸ்வினின் யூடியூப் சேனல் மீது விமர்சனங்களை அள்ளித் தெளித்தது. அதையடுத்து இனி சிஎஸ்கே போட்டி குறித்த முன்னோட்டம், ரிவ்யூ என எதையும் செய்யப்போவதில்லை என்று அந்தச் சேனல் அறிவித்தது. இந்த நிலையில் தான் அஸ்வின் இப்படி பேசி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x