Last Updated : 10 Apr, 2025 06:16 AM

 

Published : 10 Apr 2025 06:16 AM
Last Updated : 10 Apr 2025 06:16 AM

‘பாராட்டும் வகையில் இருந்த போராட்ட குணம்’ - வெற்றியை தவறவிட்ட சிஎஸ்கே அணி

ஐபிஎல் தொடரில் நேற்​று​ முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே தோல்வி அடைந்​தது. நடப்பு சீசனில் சிஎஸ்​கே​வின் 4-வது தோல்​வி​யாக இது அமைந்​தது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி ஒரு வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்து தோல்​வியை தழு​வியது. எனினும் கடைசி வரை வெற்​றிக்​காக சிஸ்கே போராடிய விதம் பாராட்​டும் வகை​யில் இருந்​தது. இந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே வெற்​றியை தவற​விட்​டது என்றே கூறவேண்​டும். மோச​மான பீல்​டிங் மற்​றும் இலக்கை துரத்​திய போது இறு​திப்​பகு​தி​யில் தொடர்ச்சியாக 24 பந்​துகளில் ஒரு பவுண்​டரி கூட அடிக்​காததும் தோல்விக்கு வித்​திட்​டது என்றே கூறலாம்.

42 பந்​துகளில், 7 பவுண்​டரி​கள், 9 சிக்​ஸர்​களு​டன் 103 ரன்​கள் விளாசிய பஞ்​சாப் அணி​யின் இளம் தொடக்க வீர​ரான பிரியன்ஷ் ஆர்​யா, ஆட்டத்தின் 2-வது பந்​தில் கொடுத்த கேட்ச்சை கலீல் அகமது தவற​விட்​டார். இதன் பின்​னர் அஸ்​வின் வீசிய 11-வது ஓவரின் 2-வது பந்தை எல்​லைக்​கோட்டுக்கு அருகே நின்ற முகேஷ் சவுத்ரி கேட்ச் செய்​தார். ஆனால் அவர், எல்​லைக்​கோட்டை மிதித்​து​விட்​டார். அப்​போது ஆர்யா 73 ரன்​களில் இருந்தார். இந்த இரு வாய்ப்​பு​களை​யும் அவர், அற்​புத​மாக பயன்​படுத்தி மிரட்​டி​விட்​டார்.

இதே​போன்று 36 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் விளாசிய ஷஷாங் சிங் கொடுத்த கேட்ச்​சை​யும் சிஎஸ்கே கோட்டைவிட்டது. நூர் அகமது வீசிய 17-வது ஓவரின் 4-வது பந்தை டீப் மிட் விக்​கெட் திசை​யில் ஷஷாங் விளாசி​னார். அப்​போது எளி​தாக வந்த கேட்ச்சை ரச்சின் ரவீந்​திரா தவற​விட்​டார். அப்​போது ஷஷாங் 32 ரன்​கள் எடுத்​திருந்​தார். இவற்றை தவிர்த்து மார்​கஸ் ஸ்டா​யினிஸ் கொடுத்த சற்று கடின​மான கேட்ச்சை விஜய் சங்​கர் கோட்டை விட்​டிருந்​தார்.

எனினும் ஸ்டா​யினிஸ் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்​ளாமல் 4 ரன்​களி​லேயே நடையை கட்​டி​னார். ஆர்​யா, ஷஷாங் சிங் ஆகியோரது கேட்ச்சை தவற​விட்​டதற்​கான பலனை சிஎஸ்கே அனுப​வித்​தது. இவர்​கள் இரு​வரும் கொடுத்த கேட்ச்சை சிந்​தாமல் சிதறாமல் எடுத்​திருந்​தால் பஞ்சாப் அணியை குறைந்த ரன்​களில் மட்​டுப்​படுத்​தி​யிருக்​கலாம். ஏனெனில் அந்த அணி 8 ஓவர்​களில் 83 ரன்​களை சேர்த்​திருந்த போதி​லும் 5 விக்​கெட்​களை இழந்​திருந்​தது.

பேட்​டிங்​கில் பெரிய இலக்கை துரத்​திய நிலை​யில் சிஎஸ்கே அணி 13.5-வது ஓவரில் இருந்து 17.4-வது ஓவர் வரை மொத்​தம் 24 பந்​துகளில் ஒரு பவுண்​டரி கூட அடிக்​க​வில்​லை. 13.4-வது ஓவரில் ஷிவம் துபே சிக்​ஸர் விளாசி​னார். அதன் பின்​னர் அடுத்த இரு பந்​துகளில் 2 ரன்​களே எடுக்கப்பட்டன. தொடர்ந்து அர்​ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் 5 ரன்​களும், லாக்கி பெர்​குசன் வீசிய அடுத்த ஓவரில் 7 ரன்​களும், யுவேந்​திர சாஹல் வீசிய 17-வது ஓவரில் 9 ரன்​களும் எடுக்​கப்​பட்​டன. இந்த 3 ஓவர்​களி​லும் ஒரு பவுண்​டரியை கூட சிஎஸ்கே பேட்​ஸ்​மேன்​கள் அடிக்க முடி​யாமல் போனது.

லாக்கி பெர்​குசன் வீசிய 18-வது ஓவரின் கடைசி இரு பந்​துகளை தோனி சிக்​ஸருக்கு விளாசி வறட்​சியை போக்​கி​யிருந்​தார். பந்​துகள் கணக்கீட்டின்​படி சுமார் 4 ஓவர்​களில் சிஎஸ்கே ஒரு பவுண்​டரி கூட அடிக்க முடி​யாமல் போனது தேவைப்​படும் ரன்​ரேட்டை அதி​கரிக்​கச் செய்து இறு​திப் பகுதி​யில் அழுத்​தத்தை கூட்​டியது. இதற்கு காரணம் அர்​ஷ்தீப் சிங், லாக்கி பெர்​குசன் ஆகியோர் 15 மற்​றும் 16-வது ஓவரை கச்​சித​மாக வீசி​யது​தான். அவர்​கள் ஆஃப் ஸ்டெம்​பு​களுக்கு வெளியே வீசி அழுத்​தம் கொடுத்​தனர். மேலும் ஷிவம் துபே ஆட்​ட​மிழந்த பிறகு யுவேந்​திர சாஹலை 17-வது ஓவரை வீசச் செய்து சிஎஸ்​கே​வின் நெருக்​கடியை அதி​கரிக்​கச் செய்​தார் ஸ்ரேயஸ் ஐயர்.

இந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே தோல்வி அடைந்த போதி​லும் சில நேர்​மறை​யான விஷ​யங்​கள் நிகழ்ந்​துள்​ளன. டாப் ஆர்​டர் பேட்​டிங் பார்​முக்கு திரும்பி உள்​ளது. நடப்பு சீசனில் முதன்​முறை​யாக பவர்​பிளே​வில் விக்​கெட்டை இழக்​காமல் 59 ரன்​கள் விளாசப்​பட்​டது. டேவன் கான்வே (69), ரச்சின் ரவீந்​திரா (36), ஷிவம் துபே (42) அதிரடி பாதைக்கு திரும்பி உள்​ளனர். எல்​லா​வற்​றுக்​கும் மேலாக தோனி 12 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள் விளாசி​யதும் கவனம் பெற்​றுள்​ளது.

பேட்​டிங் வரிசை​யில் 5-வது வீர​ராக உள்ள வந்த அவர், தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்ட விதம் எதிரணிக்கு அச்​சுறுத்​தல் கொடுக்​கும் வகை​யில் இருந்​தது. யாஷ் தாக்​குர் வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 28 ரன்​கள் தேவைப்​பட்ட போதி​லும் தோனி இருந்த வரை பஞ்​சாப் அணிக்கு ஒரு​வித பதற்​றம் இருந்​தது. இந்த ஓவரின் முதல் பந்​தில் தோனி ஆட்​ட​மிழந்த பின்​னரே பஞ்​சாப் அணி நிம்மதிப் பெரு​மூச்​சு​விட்​டது.

இந்த சீசனில் இதற்கு முன்​னர் தோல்வி அடைந்த ஆட்​டங்​களில் சிஎஸ்கே அணி எந்​த​வித போராட்ட குணத்​தை​யும் வெளிப்​படுத்​தாமல் மெத்தன போக்​குடன் செயல்​பட்​டிருந்​தது. ஆனால் பஞ்​சாப் அணிக்கு எதி​ரான தோல்​வி​யில் இந்த நிலைமை தலைகீழாக இருந்​தது. பழைய சிஎஸ்கே அணியை கண்​முன் கொண்​டு​வந்​தது. இந்த உத்​வேக​மும், போ​ராட்ட குண​மும் வரும் ஆட்​டங்​களி​லும் சிஎஸ்​கே​விடம்​ இருந்​து வெளிப்​பட்​டால்​ வெற்​றிப்​ பாதைக்​கு ​அணி திரும்​பவது ​சாத்​தியப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x