Published : 02 Jul 2018 06:12 PM
Last Updated : 02 Jul 2018 06:12 PM

டி20 தொடர்; பாகிஸ்தானை சிதறடித்த ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை: ஆஸி. அபார வெற்றி

 ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை ஆகியோரின் வேகப்பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கிய பின், ஆஸ்திரேலிய அணி பெறும் முதலாவது வெற்றியாகும். துல்லியமாகவும், திணறடிக்கும் வேகத்தில் வீசிய ஸ்டான்லேக் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மிகக்குறைந்த இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது வழக்கமான அதிரடியில் 68 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் ஹராரே நகரில் நடந்து வருகிறது.முதலாவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது பாகிஸ்தான். இதையடுத்து, 2-வது டி20 போட்டி இன்று நடந்தது.

டாஸ் வென்ற ஆரோனி பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தானின் முதல் பாதி பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டான்லேக் தெறித்து ஓடவிட்டார் என்றால், பின்வரிசை வீரர்களை ஆண்ட்ரூ டை பார்த்துக்கொண்டார்.

ஆடுகளம் ஈரப்பதம் இன்றி, பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருந்ததால், ஸ்டான்லேக் வீசிய பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின. இதனால், தொடக்கத்தில் இருந்தே எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினார்கள். பாகிஸ்தான் வீரர்களின் அதிகபட்ச ஸ்கோர் பதான் கான் சேர்த்த 29 ரன்கள்தான். 5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முகமது ஹபிஸ் டக்அவுட், பக்கர் ஜமன் (6), ஹூசைன் தலத்(10), சர்பிராஸ் அகமது (4) என வரிசையாக ஸ்டான்லேக் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்கள்.

6.2 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோயிப் மாலிக் 13 ரன்களில் ரன் அவுட் ஆகினார்.

5-வது விக்கெட்டுக்கு ஆசிப் அலி ஓரளவுக்கு நிலைத்து 22 ரன்கள் சேர்த்து ஸ்டோய்னிஸ் வேகத்தில் போல்டாகினார். கடைசி வரிசை பேட்ஸ்மேன்களான சதாப்கான் (29), பாஹீம் அஸ்ரப் (21), முகம்மது நவாஸ் (6), ஹசன் அலி (0) ஆகியோர் ஆண்ட்ரூ டை வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.

19.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டான்லேக் 4 விக்கெட்டுகளையும், டை 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 117 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாட்ர், பிஞ்ச் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தனர். அணியின் ஸ்கோர் 35 ரன்களை எட்டும்போது, ஷார்ட் 15 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஹெட்களமிறங்கி, பிஞ்சுடன் சேர்ந்தார். ஹெட் நிதானமாக பேட் செய்ய, ஆரோன் பிஞ்ச் தனது வழக்கமான அதிரடியில் விளையாடினார். 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்களை எட்டியது.

பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசி சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். 27 பந்துகளில் அரை சதம் அடித்தார் பிஞ்ச். 9.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது.

55 பந்துகள் மீதம் இருக்கையில் ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 33 பந்துகளில் 68 ரன்கள்(6 சிக்ஸர்,4 பவுண்டரி)சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x