

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் தங்கள் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி உடனான தோல்விக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிளெமிங் பங்கேற்று பேசினார். “வெற்றி பெறுவதற்கான பார்முலாவில் எங்களது கவனமும் உள்ளது. இலக்கை விரட்டும் புள்ளி விவரங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். அதை கருத்தில் கொண்டு எதிரணியை எங்களது பந்து வீச்சில் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
ஆனால், நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அணியில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருக்க வேண்டும். குறிப்பாக டாப் ஆர்டரில் ஆடும் வீரர்கள் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். சிறப்பாக விளையாடும் அணிகளுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் எடுக்கும் ரன்கள் பின் வரிசையில் வரும் பவர் ஹிட்டர்களுக்கு உதவும். அவர்களை சரியான இடத்தில் விளையாட வைக்க முடியவில்லை. தோல்வி பெறுவது விரக்தி அளிக்கிறது.
பவர்பிளேவில் தடுமாறுகிறோம். அனுபவம் கொண்ட வீரர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது வழக்கம். இக்கட்டான தருணங்களில் அது பலன் தரும். அதன் மூலம் இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்” என அவர் கூறினார்.