டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி?

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி?
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் நாளை (சனிக்கிழமை) டெல்லி கேபிடல்ஸ் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

நடப்பு சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி உள்ளது சிஎஸ்கே. டெல்லி உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை பகுதியில் காயமடைந்தார். அந்த ஆட்டத்தில் அவர் அரை சதம் பதிவு செய்தார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவர் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளராக உள்ள ஹஸ்ஸி, “இன்று அவர் பயிற்சி மேற்கொண்டார். லேசான பாதிப்பு தான். அவர் அதிலிருந்து மீண்டு வருகிறார். அதனால் டெல்லி உடனான ஆட்டத்தில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது குறித்து பயிற்சியாளர் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் இறுதி முடிவு எடுப்பார்கள். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்றால் எங்கள் அணியில் உள்ள இளம் விக்கெட் கீப்பர் கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

கடைசியாக கடந்த 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி கேப்டனாக வழிநடத்தினார். இதுவரை அவரது தலைமையில் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டெல்லி உடனான ஆட்டம் நாளை சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in