

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. 170 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான சாய் சுதர்சன் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
நடப்பு சீசனில் இடதுகை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், இதுவரை 62 சராசரியுடன் 186 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்துள்ளவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 158 ஆக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் ஹேசில்வுட் வீசிய 4-வது வீசிய ஓவரில் சாய் சுதர்சன் சிக்ஸர் விளாசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. ஹேசில்வுட் பேக் ஆஃப் தி லென்ந்த்தில் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை முன்பே கணித்த சாய்சுதர்சன் கிரீஸுக்கு குறுக்கே சென்று விக்கெட் கீப்பரின் பின்புறம் சிக்ஸர் விளாசியது வியக்க வைத்தது.
போட்டி முடிவடைந்ததும் சாய் சுதர்சன் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் இது எனது 4-வது வருடம். எனவே இந்தத் தொடர் எனக்கு அதிக அளவிலான அனுபவங்களை கொடுத்துள்ளதாக உணர்கிறேன். வலை பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் சந்தித்தேன். எனது பேட்டிங்கை மேம்படுத்திய விதத்திற்கு மிக முக்கியமான விஷயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள்தான்.
தரமான சர்வதேச பந்து வீச்சாளர்களுடன் நான் இங்கு பெறும் விளையாட்டு நேரமும் பயிற்சி நேரமும் தான் களத்தில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. பயிற்சியின் போது நிறைய விஷயங்களை, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டேன். இந்த மூன்று வருடங்களில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். விளையாட்டையும், விளையாட்டின் அடிப்படைகளையும் நன்கு புரிந்துகொள்ள இது எனக்கு உதவியது” என்றார்.