

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி மிகவும் லேட்டாக களம் காண்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து உள்ளது. அவரால் முடிகின்ற வரையில் விளையாடலாம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த மனிதரான அவர் மீது தேவை இல்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம். அவர் தான் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மதிப்பு கூட்டுகிறார்.
அவரது விக்கெட் கீப்பிங் திறன் இன்னும் அதே சிறப்புடன் உள்ளது. அவர் இன்னும் ஷார்ப்பாக செயல்படுகிறார். அவர் அணிக்காக எப்படி விளையாடுகிறார், அவரை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். எல்லோரும் அவரை பார்க்க விரும்புகின்றனர். அதனால் அவர் 11-வது வீரராக பேட் செய்ய வந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் பேட் செய்ய வந்தால் மட்டும் போதும். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக உள்ளார்.
பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற அவரைப் போன்ற ஒருவர் வெளியேறினால், அது ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை பெரிய அளவில் குறைக்கும். இந்தியாவில் சிஎஸ்கே எங்கு விளையாடினாலும் விசில் போடுகிறாரார்கள். அந்த அற்புதத்தை நிகழ்த்துபவர் அவர். அப்படி ஒரு பவரை தான் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு கொண்டு வருகிறார்” என கெயில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ‘தோனியால் நீண்ட நேரம் பேட் செய்ய முடியாது. அவரது முழங்கால் பகுதியை பழைய நாட்களை போல இல்லை. இன்னிங்ஸின் இறுதியில் தான் அவர் பேட் செய்வார்’ என சொல்லி இருந்தார்.