Published : 16 Aug 2014 03:40 PM
Last Updated : 16 Aug 2014 03:40 PM

சதமடித்தார் சர்ஃப்ராஸ்; சாதித்தார் ஹெராத்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 93.1 ஓவர்களில் 332 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முன்னணி வீரர்கள் சொதப்பியபோதும் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அஹமது சதமடித்து முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை 12 ரன்கள் முன்னிலை பெறவைத்தார்.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 99.3 ஓவர்களில் 320 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. சர்ஃப்ராஸ் அஹமது 66, அப்துர் ரெஹ்மான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

சர்ஃப்ராஸ் சதம்

3-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் சர்ஃப்ராஸும், ரெஹ்மானும் நிதானமாக ஆடினர். 3-வது நாளில் இந்த ஜோடி 8.4 ஓவர்களே தாக்குப்பிடித்தது. 47 பந்துகளைச் சந்தித்த ரெஹ்மான் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வஹாப் ரியாஸ் 17 ரன்களில் வெளியேற, சயீத் அஜ்மல் களம்புகுந்தார். அப்போது பாகிஸ்தான் 301 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு சூழ்நிலையை புரிந்துகொண்ட சர்ஃப்ராஸ் அதிரடியில் இறங்கினார். வெலகெதரா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.

332 ரன்களுக்கு ஆல்அவுட்

127 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்த சர்ஃப்ராஸ், ஹெராத்தின் 8-வது விக்கெட்டாக அமைந்தார். ஹெராத் தனது 9-வது விக்கெட்டாக அஜ்மலை (4) வீழ்த்தி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸை (93.1 ஓவர்களில் 332 ரன்கள்) முடிவுக்கு கொண்டு வந்தார். ஜுனைத் கான் 13 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வலுவான நிலையில் இலங்கை

முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் உபுல் தரங்கா 45 ரன்களும், ஜே.கே.சில்வா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. குமார் சங்ககாரா 54, ஜெயவர்த்தனா 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

9 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை பவுலர்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்களில் 127 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை பவுலர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதேபோல் சர்வதேச அளவில் (வலது கை, இடது என இரு பவுலர்களையும் சேர்த்து) 9 விக்கெட்டுகளை வீழ்த்திய 16-வது வீரர் ஹெராத் ஆவார்.

ஜூனைத் கானுக்கு காயம்

பாகிஸ்தான் பேட் செய்தபோது தமிகா பிரசாத் ஓவரில் ஜுனைத் கானின் ஹெல்மெட்டில் ஒரு பந்து தாக்கியது. அதில் அவருடைய முகத்தில் அடிபட்டது. எனினும் தொடர்ந்து ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

ஆனால் ஓய்வறைக்கு சென்ற பிறகு அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக அணி மேலாளர் மொயின் கான் கூறுகையில், “ஜுனைத் கான் நலமாக இருக்கிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x