Published : 19 Jul 2018 01:18 PM
Last Updated : 19 Jul 2018 01:18 PM

தோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி: கவுதம் கம்பீர் காட்டம்

 தோனி களமிறங்கி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாலும், அதிகமான பந்துகளை வீணாக்குவதாலும் மற்ற பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் கடைசி இரு போட்டிகளிலும் தோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திவில்லை.

2-வது போட்டியில் தோனி 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்களும், 3-வது போட்டியில் 66 பந்துகளைச் சந்தித்து 42 ரன்களும் சேர்த்தார் தோனி. ரன்களைச் சேர்க்க அதிகமான பந்துகளை தோனி எடுத்துக்கொண்டார்.

இரு போட்டிகளிலும் தோனி களமிறங்கும்போது, அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனதால், இக்கட்டான நிலையில் இருக்கும் அணியை நிலைநிறுத்த தோனி நீண்டநேரம் எடுத்துக்கொண்டார் என்று தோனிக்கு சாதகமாக கருத்துகள் வைக்கப்பட்டன. ஆனால்,  வழக்கமான தோனி களமிறங்கினால், கடைசி 10 ஓவர்களில் களத்தில் அனல் பறக்கும், அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் செல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், கடந்த இருபோட்டிகளிலும் அதற்கு மாறாக இருந்தது.

தோனியின் இந்த பேட்டிங் முறை குறித்து மூத்த வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் இங்கிலாந்து பயணம் குறித்த திறனாய்வுப் பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

''இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகிளிலும் தோனி விளையாடிய விதம் அவரின் வழக்கமான ஆட்டத்தை விட்டு விலகி இருந்தது. களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான டாட் பால்களை தோனி சந்தித்தார். ரன்கள் எடுப்பதில் தோனி அக்கறை காட்டவில்லை.

தோனி இதுபோன்ற மந்தமாகவும், அதிகமான டாட் பந்துகளை விட்டு பேட் செய்வது அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்குத்தான் அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும்.

கடந்த இருபோட்டிகளிலும் தோனியின் விளையாட்டை நான் குறை கூறவில்லை. அவர் இன்னும் அதிகமான உத்வேகத்துடன் பந்துகளை வீணாக்காமல், சுறுசுறுப்பாக பேட் செய்ய வேண்டும். ஒருவீரர் களத்திற்கு வந்தவுடன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான நேரத்தையும், பந்துகளையும் வீணாக்கக்கூடாது.

தோனி களமிறங்குவதே எதிரணியின் பந்துவீச்சை அடித்துச் சிதறடிப்பதற்குத்தான். ஆனால், தோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடுவது வேதனைக்குரியதாகும்.

இங்கிலாந்து அணியின் மொயின் அலியும், அதிர் ரஷித்தும் சிறப்பாகப் பந்து வீசினார்கள். தோனிக்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் அவர்களின் பந்துவீச்சு இருந்தது. தோனி இதற்கு முன் இதுபோன்று அதிகமான டாட் பந்துகளையும், பந்துகளை வீணாக்கியும் நான் பார்த்தது இல்லை. தோனி பேட்டிங் மீது அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

தோனி களத்தில் இருந்தால், கடைசி 10 ஓவர்கள் மிகுந்த ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர். ஆனால், இந்த விஷயம் கடந்த போட்டிகளிலும் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. தோனி தனது வழக்கமான பாணியில் பேட் செய்திருந்தால், அணியின் ஸ்கோர் 280 ரன்களை எட்டி இருக்கும்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய விதத்தைப் பார்த்திருந்தால் புரியும். அதேபோன்ற ஆக்ரோஷமான பேட்டிங்கை தோனி வெளிப்படுத்துவது அவசியம்.''

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x