Last Updated : 15 Jul, 2018 01:38 PM

 

Published : 15 Jul 2018 01:38 PM
Last Updated : 15 Jul 2018 01:38 PM

சோடை போகிறதா தோனியின் பேட்டிங் திறமை? -ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா?

கிரிக்கெட்டின் தாய்வீடு என்று அழைக்கப்படும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், தோனி நேற்று சிறப்பாக பேட் செய்யாத காரணத்தால், அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 86 ரன்களில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 236 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் தோனி 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிரடியான ஆட்டத்துக்கும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறமை கொண்ட தோனி நேற்று சொதப்பலாக பேட் செய்தது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.

தோனி நேற்றைய போட்டியில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார், 37 ரன்களில் இரு பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தார்.

உலகளவில் தோனிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் தோனியை ரசிகர்களில் ஒருபகுதியினர் விமர்சித்தது வியப்பாக இருக்கிறது என்று இங்கிலாந்து வீரர் ஜோயி ரூட் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ரசிகர்கள் தோனியைக் கிண்டல் செய்து, விமர்சித்த விஷயம் தனக்குத் தெரியாது என்று யஜுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

46-வது ஓவர் தொடங்கும் முன்புவரை ஆட்டம் சிறப்பாகத்தான் சென்றது. அடுத்த 30 பந்துகளில் 110 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், டேவிட் வில்லியின் ஓவரில் முதல் 4 பந்துகளில் தோனி ரன் அடிக்காமல் டாட்பந்து விட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.

பிளங்கெட்டின் ஓவருக்கு முன், கூல்டிரிங்ஸ், தண்ணீர் குடித்த தோனி, சர்துல் தாக்கூர், அக்சர் படேலை பேட்டை கொண்டு வரச் செய்து பேட்டை மாற்றினார். இதனால், அடுத்து அதிரடி ஆட்டம் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 47-வது ஓவரின் முதல் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார். இது ரசிகர்களை மேலும் காட்டமடையச் செய்து, தோனியை சத்தமிட்டு விமர்சித்தனர்.

இது குறித்து யஜுவேந்திர சாஹலிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ’’தோனி பேட்டை மாற்றும் போது பதிலி வீரர்களிடம் என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த பின், தோனிக்கு ஆதரவாக ஆட பேட்டிங்கில் சிறந்த வீரர்கள் யாருமில்லை. நான், குல்தீப், உமேஷ் மட்டுமே இருந்தோம். அப்படி இருக்கையில், தோனிக்குதான் நெருக்கடி அதிகமாகி இருக்கும். இதற்கு முன் தோனி அதிகமாக பேட் செய்யவில்லை, அப்படி இருக்கும்போது, அதில் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்திருக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் விமர்சனங்களுக்கு அதிகமாக இடம் கொடுக்காத வீரர்களில் தோனி மிக முக்கியமானவர். அவ்வாறு விமர்சனங்கள் தனது திறமை மீது எழுந்தபோதெல்லாம் அதற்கான தகுந்த பதிலடிகளை தோனி கொடுத்து வந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்படவில்லை, தலைமை சரியில்லை என்று ரசிகர்களில் ஒருதரப்பினராலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் பேசப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தார் தோனி.

அதேபோன்ற நிலைமை கிரிக்கெட்டின் தாய்வீடு என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் தோனி மீது விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு தோனி, சரியான பதிலடி கொடுப்பாரா என்பது அடுத்த போட்டியில் தெரியும்.

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x