

ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எதிர்முனையில் ஷஷாங்க் சிங் அற்புதமாக அதிரடி ஆட்டத்தை ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதால் ஸ்ரேயாஸ் ஐயர் தன் சதத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அணியின் ஸ்கோர்தான் முக்கியம் என்று ஆட பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 என்று ரன்களைக் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டர் சாய் சுதர்சன் 74, ஜாஸ் பட்லர் 54, கில் 33, ருதர்போர்ட் 46 என்று வெளுத்துக் கட்ட 232 ரன்களை விரட்டி அச்சுறுத்தியது.
ராகுல் திவேத்தியா ஒரு சிக்ஸருடன் 20-வது ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட் ஆனதால் பஞ்சாப் வெற்றி பெற முடிந்தது, இல்லையேல் ஒருவேளை இவரும் ருதர்போர்டும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்திருப்பார்கள். 244 ரன்கள் இலக்கையெல்லாம் சேஸ் செய்யும் போது பவர் ப்ளேயில் 80 ரன்களை அடிக்க வேண்டும், குறுக்கப்பட்ட எல்லைக்கோடுகள், பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அதிகம் வர வேண்டும் என்ற பிராண்டிங்கினால் களவியூகங்களும் தளர்வாக அமைய இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் 6 ஓவர்களில் 61 ரன்கள்தான் எடுத்தது. சாய் சுதர்சன் ஆரம்பத்தில் வேகமாக அடிக்காமல் திணறினார். இந்தச் சுணக்கமே இடைப்பட்ட ஓவர்களான 7-15 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 113 ரன்களைக் குவித்தாலும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவை என்பது சாரி கொஞ்சம் டூ மச் என்று ஆனது. ஆகவே பவர் ப்ளேயில் சுதர்சனின் ஆரம்ப கட்ட சொதப்பலே தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய பிரமாதமான இன்னிங்ஸ் உண்மையில் கொண்டாடப்படும் வர்த்தக ஹீரோக்கள் ஆடும் ‘பங்களிப்பு’ இன்னிங்ஸ்களை விட ஆகச்சிறந்ததாகவே இருந்தது. நேற்று ஸ்ரேயாஸ் ஐயர் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்களை விளாசியிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்ய அவருக்குத் தேவை 3 ரன்களே. ஆனால், ஷஷாங்க் சிங் எதிர்முனையில் முகமது சிராஜைப் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்ததை ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்முனையிலிருந்து வேடிக்கைப் பார்க்க முடிவெடுத்து ஷஷாங்கை அடித்து நொறுக்க அனுமதித்தார்.
இதில் ஷஷாங்கிடம் ஸ்ரேயாஸ் சொன்னதுதன் ஹைலைட். அதாவது ஷஷாங்கை அழைத்து கடைசி ஓவர் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பார்க்காதே. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரிக்கு அடித்து விரட்டு என்று கூறியுள்ளார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
“ஸ்கோர்போர்டைப் பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயர் 97-ல் இருந்தார், நான் அவரிடம் சென்று சிங்கிள் எடுத்து ஸ்டிரைக் கொடுக்கட்டுமா என்று கேட்கலாம் என்று சென்ற போது அவர் முந்திக் கொண்டு ‘என் சதத்தைப் பற்றிக் கவலைப்படாதே, நீ உன் பாணியில் சிக்ஸர், பவுண்டரிகளை அடித்து டீம் ஸ்கோரை உயர்த்து’ என்றார். இதைச் சொல்வதற்கு ஒரு தைரியமும், நிறைய பெருந்தன்மையும் வேண்டும். காரணம் என்னவெனில் டி20-யில் சதங்கள் அடிக்கடி வராது. அதுவும் ஐபிஎல்-ல் கடினம். ஸ்ரேயாஸ் சொன்னவுடன் என் தன்னம்பிக்கை மேலும் அதிகரித்தது” என்று ஷஷாங்க் சிங் கூறியுள்ளார்.