

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.
“99 சதவீத முடிவுகளை ருதுராஜ்தான் எடுக்கிறார். ஃபீல்ட் பிளேஸ்மென்ட், பவுலர்களை ரொட்டேட் செய்வது என அனைத்து முடிவுகளும் அவருடையது. தலைமை பண்பு அவரது இயல்பில் உள்ளது. எனது பங்கு எதுவும் அதில் இல்லை” என தோனி கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியில் தற்போதைய டி20 கிரிக்கெட் பேட்டிங் பாணி முற்றிலும் மாறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2008 உடன் ஒப்பிடுகையில் தற்போது அது முற்றிலும் மாறியுள்ளது. உள்ளூர் மொழிகளில் போட்டிகளை வர்ணனை செய்வது வரவேற்கத்தக்கது. குறிப்பாக போஜ்புரி வர்ணனை எனர்ஜி தரும் வகையில் அமைந்துள்ளது. பள்ளி நாட்களில் வானொலியில் வர்ணனை கேட்ட நினைவுகளை எனக்கு அது தருகிறது. கோலி உடன் தனக்கு வலுவான பிணைப்பு உள்ளதாகவும் தோனி கூறியுள்ளார்.
43 வயதான தோனிக்கு இது 18-வது ஐபிஎல் சீசன். கடந்த 2023 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்தி வந்தார். தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 2024-ம் ஆண்டு சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் வழிநடத்தி வருகிறார்.