

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதியர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். இன்று அவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில், இந்த இனிய தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2023-ல் மண வாழ்க்கையில் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இணைந்தனர். அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். அதியாவும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
‘பெண் குழந்தை பிறந்திறக்கிறார்’ என இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரும் இதை பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் ராகுல் - அதியா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற இந்திய அணியில் கே.எல்.ராகுல் முக்கிய பங்களிப்பை வழங்கினார். லோயர் மிடில் ஆர்டரில் அவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். குழந்தை பிறப்பு காரணமாக அவர் ஆரம்ப கட்ட ஆட்டங்களை மிஸ் செய்துள்ளார்.