

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் டி20 தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. தொடரின் நான்காவது போட்டி இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ஃபின் ஆலன் 50, டிம் செய்ஃபெர்ட் 44, கேப்டன் பிரேஸ்வெல் 46 ரன்கள் எடுத்தனர். 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
நியூஸிலாந்து அணி அபாரமாக பந்து வீசியது. அதனால் பாகிஸ்தான் அணியில் இரண்டு பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 13.5 ஓவர்களில் 80 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தோல்வியின் பிடியில் தவித்தது. 16.2 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அப்துல் ஸமாத், 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். இர்ஃபான் கான், 24 ரன்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 மற்றும் ஸகாரி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வில்லியம் ஓ’ரூர்கி, ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஃபின் ஆலன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.