

சென்னை: 50 வயதில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக பேட் செய்வதை நாம் பார்த்தோம். தோனி வசமும் இன்னும் சில வருட ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்தார். தோனி ஓய்வு பெறுவது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் இன்று (மார்ச் 23) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார்.
“அண்மையில் 50 வயதிலும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக பேட் செய்ததை நாம் பார்த்தோம். அதனால் தோனி வசம் இன்னும் சில வருட ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ளது என நான் நினைக்கிறேன். அவர் அணியில் இருப்பது நான் உட்பட எங்கள் அணி வீரர்கள் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
43 வயதில் அவர் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புவார். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பின்பற்றும் உத்தியை தொடருவோம்.
அவரது ரோல் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதிக சிக்ஸர்களை அடிக்க பயிற்சி செய்கிறார். அதற்கு தகுந்தபடி உடல் தகுதியை வைத்துக் கொள்வதில் அவரது கவனம் உள்ளது. அதன் மூலம் தாக்கம் ஏற்படுத்துகிறார். அதனால் தான் சொல்கிறேன் தோனி வசம் இன்னும் சில வருட கிரிக்கெட் மீதமுள்ளது” என ருதுராஜ் கூறினார்.
கடந்த சீசனில் தோனி 161 ரன்களை எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220 என இருந்தது குறிப்பிடத்தக்கது.