

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் தமது அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா தொடக்க வீரருக்கான சிறப்பு வாய்ந்த தனித்துவ திறமைகள் கொண்டவர் என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல் பின்னால் இறங்கி மேட்சை வெற்றி பெற்றுக் கொடுக்கும் பினிஷர் மற்றும் மீடியம் வேகப்பந்து வீச்சாளரான சூரியான்ஷ் ஷெட்கே மற்றும் 19 வயது ஆல்ரவுண்டர் முஷீர் கான் ஆகியோரும் இந்த ஐபிஎல் தொடரில் ஜொலிப்பதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“பிரியன்ஷ் ஆர்யா எங்களுக்கான சிறப்புத் திறமைகள் வாய்ந்த ஒரு தொடக்க வீரர் எங்களிடம் இருக்கிறார். வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்யப்படும் தேவைகளை வைத்து பிரியன்ஷ் ஆர்யா இடம் தீர்மானிக்கப்படும், ஆனால் அவரது பேட்டிங் திறமைகள் எனக்கு உற்சாகமூட்டுகிறது” என்றார்.
இடது கை வீரரான பிரியன்ஷ் ஆர்யாவின் திறமைகள் முதன் முதலில் வெளி உலகிற்கு கவனம் பெற்ற தருணம் அவர் டெல்லி பிரீமியர் லீகில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியத் தருணம் தான். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 2024-25 சீசனில் ஒரு சதத்துடன் 325 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 41, ஸ்ட்ரைக் ரேட் தான் மூக்கின் மேல் விரல் வைப்பதாக உள்ளது, 176.63 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வருகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் இந்த முறை அட்டாக்கிங் தொடக்க வீரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரியன்ஷ் ஆர்யா தவிர பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ஜாஷ் இங்லிஸ் ஆகியோரும் உள்ளனர். ஆர்யா போலவே சையது முஷ்டாக் அலி டி20 டிராபியில் அசத்திய சூரியன்ஷ் ஷெட்கேவின் ஸ்ட்ரைக் ரேட் 251.92. இது அசாத்தியமான ஸ்ட்ரைக் ரேட்.
ஆந்திராவின் 230 ரன்களையும் விதர்பாவின் 222 ரன்களையும் மும்பை அணி வெற்றிகரமாக விரட்டியதில் இவரது சிறு அதிரடி இன்னிங்ஸ் செய்த பங்களிப்பு விதந்தோதத்தக்கவை.
“சூரியன்ஷ் ஷெட்கேவும் எங்களது பயிற்சியின் போது பார்த்ததில் மிகமிகக் கவனமீர்க்கும் வீரராக உள்ளார்” என்கிறார் ரிக்கி பான்டிங். அதேபோல் “ஆற்றல் மற்றும் கேளிக்கை பற்றி நான் பேசினால் முஷீர் கான் என் ஆர்வத்தைத் தூண்டுகிறார். இவருடன் பணியாற்றவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மார்ச் 25-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி தன் முதல் போட்டியில் ஆடுகிறது.