

18-வது ஐபிஎல் சீசன் தொடங்கப் போகிறது. ஆர்சிபி அணி ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பதை வைத்து மீம்களும் கேலிகளும் கிண்டல்களும் வந்தவண்ணம் உள்ள நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதாரை நியமித்துள்ளனர். விராட் கோலி இருக்கும் போது ஏன் ரஜத் படிதார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது நியாயமே. ஆனால், கோலி கேப்டன்சியை விரும்பவில்லை என்று ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல்-2025 ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மாவை ஆர்சிபி அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
“ரஜத் படிதார்தான் கேப்டன் என்பது எனக்கு முன்னமேயே தெரிய வந்தது. இந்த மட்டத்தில் சில காலம் ஆடும்போதே விஷயங்கள் எந்த ரூபம் எடுக்கும் என்பதை நாம் அறியத் தொடங்கி விடுவோம். விராட் கோலி அணியின் கேப்டனாக விரும்பவில்லை.
ஏன் விராட் பாய் கேப்டன்சியை வேண்டாம் என்று கூறினார் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் அணியின் மேலாளர்கள் குழுவில் இல்லை. எனக்குக் காரணம் தெரியவரும் போது விராட் ஏன் கேப்டன்சியை மறுக்கிறார் என்பதற்கான காரணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 2-3 ஆண்டுகளாகவே அவர் கேப்டனாக இல்லை, எனவே இந்த சீசனிலும் அவர் கேப்டன்சியை ஏற்க மாட்டார் என்றே நினைத்தேன். அப்படித்தான் நடந்தது. ரஜத் படிதார் தான் சிறந்த தேர்வு என்று நான் கருதுகிறேன்.” என்று ஜிதேஷ் சர்மா விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனில் மார்ச் 22-ம் தேதி ஈடன் கார்டன்ஸில் ஆர்சிபி அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த முறையாவது கோப்பையை ஆர்சிபி வெல்லுமா என்பதுதான் பெங்களூரு ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் தாரதம்மியமே வேறு எந்த அணி இறுதி வரை செல்லும் என்பதெல்லாம் கணக்கீடுகளுக்கு உட்பட்டதுதான்.