Published : 04 Jul 2018 09:22 AM
Last Updated : 04 Jul 2018 09:22 AM

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றில் நுழைந்த சுவீடன்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று கால் இறுதிச் சுற்றில் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் சுவீடன், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே சுவிட்ர்லாந்து வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து வீரர் ஜோசி டிர்மிக் பாஸ் செய்த பந்தை ஜெர்டன் ஷகிரி பாக்ஸ் பகுதியிலிருந்து கோலை நோக்கி உதைத்தார். ஆனால் கோல் வலையை விட்டு பந்து விலககிச் சென்றது.

இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீரர் கிரானிட் ஜாகா பவுல் செய்ததால் சுவீடன் வீரர்களுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதை கோலாக்கத் தவறினார் சுவிட்சர்லாந்து வீரர் ஓலா டோவோனன்.

3-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்க்கஸ் பெர்க் செய்த பவுல் காரணமாக சுவிட்சர்லாந்துக்கு ஃப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த முயற்சியும் கோலாகவில்லை. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து பிளெரிம் சைமெய்லி பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதியிலிருந்து ஸ்டீவன் சுபேர் அடித்தார். ஆனால் கோல் கம்பத்துக்கு வெளியே பந்து சென்றது.

அதற்கடுத்த நிமிடத்திலேயே சுவீடன் அணியின் ஓலா டோவேனன் பாஸ் செய்த பந்தை கோல் வலையை நோக்கி மார்க்கஸ் பெர்க் உதைத்தார். ஆனால் இந்த பந்தை கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மைக்கேல் லஸ்டிக் பாக்ஸ் பகுதியிலிருந்து கோல் வலையை நோக்கி உதைத்த பந்து இடதுபக்கமாக விலகிச் சென்றது.

ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மைக்கேல் லஸ்டிக் செய்த பவுல் காரணமாக அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டீவன் சுபேர் பாஸ் செய்த பந்தை பிளெரிம் சைமெய்லி பாக்ஸ் பகுதியின் மையத்திலிருந்து உதைத்தார். இந்த பந்து கோல் கம்பத்திலிருந்து விலகிச் சென்றது.

முதல் பாதி வரை 0-0 என்ற நிலையே நீடித்தது. 2-வது பாதியின் தொடக்கத்திலேயே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் கிளாசன் கடத்தித் தந்த பந்தை ஓலா டோவோனன் கோலாக்க முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று விரயமானது.

66-வது நிமிடத்தில் சுவீடனுக்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தினார் எமில் போர்ஸ்பெர்க். ஓலா டோவோனன் பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்கு எடுத்துச் சென்ற போர்ஸ்பெர்க் கோல் வலையை நோக்கி வேகமாக உதைத்தார். அதை தடுக்க சுவிட்சர்லாந்து வீரர் முயன்றார். ஆனால் அது அவரது காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்தது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் சுவீடன் முன்னிலை வகித்தது. 68-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் தள்ளிவிட்டதாக சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஜாகாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

79-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரிகார்டோ ரோட்ரிக்ஸ் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார் ஜோஹன் ஜோரு. ஆனால் அதை கோல்கீப்பர் திறமையாகத் தடுத்துவிட்டார். இறுதி வரை இந்த நிலை நீடிக்க 1-0 என்ற கணக்கில் சுவீடன் வெற்றி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x