பிசிசிஐ 'சென்ட்ரல் கான்ட்ராக்ட்'டை இழந்தாலும் வென்று காட்டிய சாம்பியன் ஸ்ரேயாஸ்!

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்
Updated on
1 min read

சென்னை: சரியாக ஓராண்டுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தை இழந்தார் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இப்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுள்ள இந்திய அணியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ‘நம்பர் 4’ நடுவரிசை நாயக பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தரப்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

5 போட்டிகளில் ஆடி மொத்தம் 243 ரன்கள் எடுத்துள்ளார். 15, 56, 79, 45, 48 என இது அமைந்துள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த தொடரில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். அவரது பேட்டிங் சராசரி 48.60.

2023 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி இருந்தார். அந்த தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் சதம் விளாசினார். இருப்பினும் அப்போது முதுகு வலி காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட காரணத்தால் அவர் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. அதனால் அவர் மனம் தளரவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவர் அசத்தலாக ஆடினார்.

மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொன்று ஒருநாள் தொடரில் முறையே 59, 44, 78 ரன்கள் எடுத்தார். இப்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் முக்கிய நாக் ஆடி அசத்தினார். இது அவர் வெல்லும் முதல் ஐசிசி கோப்பையாக அமைந்துள்ளது.

“இந்த தொடரில் அணியின் மிடில் ஆர்டரில் அற்புதமான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வெளிப்படுத்தினார். அவருடன் களத்தில் ஆடும் பேட்டர்களுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். கோலி உடன் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். நியூஸிலாந்துக்கு எதிரான இறுதியிலும் அதையே தான் செய்தார். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடினார்” என ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் ரோஹித் பாராட்டி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in