Published : 10 Mar 2025 07:59 AM
Last Updated : 10 Mar 2025 07:59 AM
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டன. தொடர்ந்து முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடிக்க 11 ரன்கள் சேர்க்கப்பட்டன.
இதனால் நியூஸிலாந்து அணி 7 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி வில் யங்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வில் யங் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 69 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ரச்சின் ரவீந்திராவை போல்டாக்கினார். 29 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திரா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து குல்தீப் யாதவ் தனது அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை வெளியேற்றினார். 14 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன், குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டாம் லேதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.
5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரேஸ்வெல் சீராக ரன்கள் சேர்த்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 91 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் கடந்தார். டேரில் மிட்செல் 101 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல் மட்டையை சுழற்றினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாச 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். கைல் ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித் சர்மா, வில்லியம் ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து நேதன் ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரோஹித் சர்மா. பின்னர் நேதன் ஸ்மித் வீசிய 8-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளையும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 58-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 50 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது கிளென் பிலிப்ஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஜோடி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
சிறப்பாக பேட் செய்து வந்த ரோஹித் சர்மா 83 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐசிசி தொடர்களில் (50 ஓவர்) இது அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 122 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயருடன், அக்சர் படேல் இணைந்தார்.
மைக்கேல் பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து வந்தார். சீராக ரன்கள் சேர்த்த அவர், 48 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில், ஷாட் ஃபைன் லெக் திசையில் ரச்சின் ரவீந்திராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 38.4 ஓவர்களில் 183 ஆக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 68 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தன.
இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். பிரேஸ்வெல் வீசிய 41.4-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது வில் ரூர்க்கிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவையாக இருந்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். ரவீந்திரா வீசிய 46-வது ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 47-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. 18 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஹர்திக் பாண்டியா வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 49-வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விளாச முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 9 ரன்களும், கே.எல்.ராகுல் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு தொடரில் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ம் ஆண்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக வாகை சூடியுள்ளது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வானார்கள்.
பதிலடி கொடுத்த இந்தியா: 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி.
ரூ.19.50 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT