Published : 22 Jul 2018 10:00 AM
Last Updated : 22 Jul 2018 10:00 AM

கொழும்பு டெஸ்ட் போட்டியில் 124 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப் பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 124 ரன்களுக்கு சுருண்டது.

கொழும்பில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. கருணா ரத்னே 53, குணதிலகா 57, மெண்டிஸ் 21, மேத்யூஸ் 10, திக்வெலா 5, தனஞ்ஜெயா டி சில்வா 60, பெரேரா 17, சுரங்கா லக்மல் 0, ரோஷன் சில்வா 22 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அகிலா தனஞ்ஜெயா 16, ரங்கனா ஹெராத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 104.1 ஓவரில் 338 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி வீரராக ரங்கனா ஹெராத்தையும் (35), கேசவ் மகாராஜ் வெளியேற்றினார். கேசவ் மகாராஜ் 41.1 ஓவர்கள் வீசி 10 மெய்டன்களுடன் 129 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர்களில் கடந்த 1957-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டததில் டேபீல்ட் 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 61 ஆண்டுகளுக்குப் பின் கேசவ் மகாராஜ் சமன் செய்துள்ளார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 34.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு சுருண்டது.அதிகபட்ச மாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 48, குயிண்டன் டி காக் 32, ஹசிம் ஆம்லா 19, டெம்பா பவுமா 11 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 5, பெரேரா 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 214 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 34 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. குணதிலாக 61, தனஞ்ஜெயா டி சில்வா 0, மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கருணா ரத்னே 59, மேத்யூஸ் 12 ரன்களுடன் ஆடடமிழக்காமல் உள்ளனர். 365 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி கைவசம் 7 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x