Published : 09 Mar 2025 06:16 PM
Last Updated : 09 Mar 2025 06:16 PM
துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 15-வது முறை இந்தியா டாஸை இழந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரோஹித் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார். இருப்பினும் ‘எதற்கும் தயார்’ என டாஸின் போது அவர் சொல்லி இருந்தார். இந்த தொடர் அந்த அனுபவத்தை தங்களுக்கு தந்துள்ளதாக கூறினார்.
நியூஸிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இந்தப் போட்டியில் கான்வே விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் கேப்டன் சான்டனர் அவரை ஆடும் லெவனில் எடுக்கவில்லை.
முதல் 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. இன்னிங்ஸின் முதல் மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன்கள் தான் எடுத்திருந்தது நியூஸி. அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் வேக வேகமாக ரன் குவித்தார் ரச்சின். உடனடியாக வருண் சக்கரவர்த்தியை பந்து வீச செய்தார் கேப்டன் ரோஹித். அதற்கான பலனாக 8-வது ஓவரில் வில் யங் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் வருண். அந்த விக்கெட் இந்திய அணிக்கு அவசியமானதாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு ரச்சின் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது.
11-வது ஓவரை குல்தீப் வீசினார். முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவை போல்ட் செய்தார். அவர் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கடுத்து அவர் வீசிய 13-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த கேட்ச்சை அவரே (குல்தீப்) பிடித்து வெளியேற்றினார். அதன் பின்னர் நியூஸிலாந்து அணியின் மிட்செல் மற்றும் டாம் லேதம் இணைந்து மிகவும் நிதானமாக இன்னிங்ஸை அணுகினர். பவுண்டரி அடிக்க முடியாத காரணத்தால் அவர்கள் மீது அழுத்தம் கூடியது. அதோடு ஸ்பின் ஆப்ஷனை வைத்து மேலும் நெருக்கடி கொடுத்தார் ரோஹித்.
24-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் லேதமை ஜடேஜா வெளியேற்றினார். அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வருண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. அந்த அணிக்கு களத்தில் நம்பிக்கை தந்த இருவரில் மிட்செல் ஒருவராக திகழ்ந்தார். அரை சதம் பதிவு செய்ய 91 பந்துகள் எடுத்துக் கொண்டார். அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வேகத்தில் விக்கெட்டை இழந்தார். சான்ட்னரை கோலி ரன் அவுட் செய்தார்.
50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும் போதெல்லாம் அதை நியூஸிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 40 பந்துகளில் 53 ரன்களை அவர் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
இந்திய அணியின் பவுலர்கள் தரப்பில் வருண் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் 9 ஓவர்களில் 74 ரன்களை கொடுத்திருந்தார் ஷமி. ஓவருக்கு 3 ரன்கள் என்ற எகானமயில் 10 ஓவர்களை பூர்த்தி செய்தார் ஜடேஜா. வருண், குல்தீப் மற்றும் அக்சர் ஆகியோரின் பவுலிங் எகானமியும் சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் எடுக்க வேண்டும். நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்றி இன்று விளையாடவில்லை. இந்திய அணி இந்த போட்டியில் 4 கேட்ச்களை டிராப் செய்தது. அதை பிடித்திருந்தால் நியூஸிலாந்து அணியை இன்னும் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பவர்பிளே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான தருணமாகும். கேப்டன் ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை தருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT